07,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: புதுக்கோட்டை ஆலங்குடி அருகிலுள்ள விடுதியில் பெரியார் சிலையை உடைத்த விவகாரத்தில் நேற்று இரவு செந்தில்குமார் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணையில் அவர் ஒரு தலைமைக்காவலர் என்பதும் சட்டீஸ்கர் மாநிலத்தில் பணிபுரிபவர் என்பதும் தெரியவந்திருக்கிறது. அதனை அறிந்ததும் காவல்துறை அதிகாரிகள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். விடுமுறை எடுத்துக்கொண்டு ஊருக்கு வந்தவர், குடிபோதையில் இந்தக் காரியத்தை செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் தான் மட்டுமே சிலையை உடைத்ததாகவும் வேறு யாரும் இதில் ஈடுபடவில்லை என்றும், முழுக்க முழுக்க குடி போதையில் செய்ததாகவும் வேறு எந்த உள்நோக்கமும் வைத்து செய்யவில்லை என்பதாகவும் விசாரணையில் செந்தில்குமார் கூறி இருக்கிறார். சிலை அமைந்துள்ள பகுதியிலிருந்து கொஞ்சம் தூரத்தில் புதுக்கோட்டை செல்லும் சாலையில் டாஸ்மாக் கடையில் கண்காணிப்பு படக்கருவி இருந்துள்ளது. அதில், செந்தில்குமார் இரவு நேரத்தில் அதாவது, சம்பவம் நடந்த அன்று மூன்று முறை டாஸ்மாக் கடைக்கு வந்து சரக்கு வாங்கியது பதிவாகியுள்ளது. போதையில் தள்ளாடியபடி வருவதும் அவரது தோற்றமும் காவல்துறையினருக்கு சந்தேகத்தைக் கிளப்பியுள்ளது. தவிர, நள்ளிரவு நேரத்தில் பூட்டப்பட்ட டாஸ்மாக் கடை பக்கமாக வந்து சென்றதும் படக்கருவியில் பதிவாகி இருந்தது. இதன்பின் அவரை பிடித்து காவல்துறையினர் விசாரிக்கவே, உண்மை வெளிவந்துள்ளது. ஆனால், அவர் மத்திய ஆயுதப்படையில் வேலை பார்ப்பவர் என்பதை அறிந்து ஒட்டுமொத்த காவல்துறையினரும் அதிர்ந்தனர். தகவல் அறிந்து வந்த திருச்சி சரக காவல்துறை தலைவர் லலிதா லெட்சுமி, செந்தில் குமாரிடம் விசாரணை செய்து உறுதிப்படுத்திக்கொண்டு, கைது செய்ய நடவடிக்கை எடுக்கும்படி காவல்கண்காணிப்பாளரிடம் கூறி இருக்கிறார். முன்னதாக, பெரியார் சிலை உடைக்கப்பட்ட தகவல் அறிந்து மாவட்ட கண்காணிப்பாளர் செல்வராஜ் புதுக்கோட்டை விடுதிக்கு வந்துள்ளார். அப்போது, தி.மு.க-வினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், திராவிடர் கழகத்தினர் ஒன்று திரண்டு, சிலை உடைப்புக்கு கண்டன பேரணியும் ஆர்பாபாட்டத்தையும் நடத்தி முடித்துவிட்டு, எ ஸ்.பி. செல்வராஜை சந்தித்து, ‘சிலையை உடைத்தவனை மாலைக்குள் கைது செய்யவேண்டும். இல்லையெனில், பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபடுவோம்’ என்று கூறியிருக்கிறார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால், மூன்று கட்சிகளும் நடத்திய பேரணியிலும் கண்டன ஆர்ப்பாட்டத்திலும் சிலையை உடைத்த செந்தில் குமாரும் கலந்துக்கொண்டு, குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என்று முழக்கமிட்டிருப்பதுதான். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,733
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



