நடுவண் அரசின் நீட் பொது நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் மே 7ம் தேதி நடைபெற்றது. நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம் நடத்திய இந்தத் தேர்வை நாடு முழுவதும் சுமார் 11 லட்சம் மாணவர்கள் எழுதினர். கடந்த ஆண்டு அவசரச் சட்டம் இயற்றப்பட்டதன் மூலம் தமிழகத்துக்கு விலக்கு அளிக்கப்பட்டது. பனிரன்டாம் வகுப்பு தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே கடந்த கல்வியாண்டில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற்றது. இந்நிலையில், இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு அளிக்கும் வகையில் இரண்டு சட்ட மசோதாக்கள் தமிழக சட்டப்பேரவையில் பிப்ரவரியில் நிறைவேற்றப்பட்டன. ஆனால் அந்த மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை நடுவண் அரசு பெற்றுத் தர மறுத்தது. மேலும் தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க முடியாது என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தது. இதனையடுத்து நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற்று முடிந்தது. தமிழகத்தில் 88 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதினர். ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், அஸாமி, வங்காளம், குஜராத்தி, மராத்தி, ஒடியா ஆகிய 10 மொழிகளில் தேர்வு நடைபெற்றது. அடுத்த ஆண்டில் இருந்து உருது மொழியிலும் தேர்வு நடைபெறும். நீட் தேர்வு நடுவண் இடைநிலைக் கல்வி வாரியப் பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படுகிறது. நடுவண் பாடத்திட்டத்தின் அடிப்படையில் தேர்வு நடத்தப்படுவதால் அதில் படித்தவர்களுக்கு தேர்வுகள் எளிதாக இருக்கும். அதே சமயம், தமிழக அரசுப் பள்ளியில் சமச்சீர் அல்லது தனியார் மெட்ரிக் பள்ளியில் படித்த மாணவர்கள் நீட் தேர்வெழுத வேண்டும் என்பதால், அதற்கான பயிற்சி மையங்களில் படித்து தேர்வெழுதியுள்ளனர். இதனால், அவர்களுக்கு நீட் தேர்வு சிரமத்தையே ஏற்படுத்தியுள்ளது. தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு அடிப்படையில் மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை நடைபெற்றால் சமூக நீதிக்கும், ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கும் ஏற்படும் பாதிப்புகள் கொஞ்சநஞ்சமல்ல. தமிழகத்தில் இன்றைய நிலையில், புதிதாக தொடங்கப்படவுள்ள புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி உட்பட 22 அரசு மருத்துவக் கல்லூரிகளில், அனைத்திந்திய ஒதுக்கீட்டுக்கு 15விழுக்காடு வழங்கியது போக 2445 இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து அரசு ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படவுள்ள 1198 இடங்கள் என மொத்தம் 3643 மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் ஒற்றைச்சாளர முறையில் நிரப்பப்பட உள்ளன. அதேபோல், அரசு மற்றும் தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1330 பல் மருத்துவ இடங்களுக்கும் ஒற்றைச் சாளர முறையில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறவிருக்கிறது. தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு வரை 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் தான் மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்தது. அதில் 70 விழுக்காட்டுக்கும் மேற்பட்ட இடங்களை கிராமப்புற, ஏழை மாணவர்கள் தான் கைப்பற்றி வந்தனர். சாதாரண கூலித் தொழிலாளியின் பிள்ளைகள் கூட மருத்துவப் படிப்பில் சேர முடிந்தது என்றால், 2007ஆம் ஆண்டில் மருத்துவ நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது தான். ஆனால், இப்போது தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுகள் அறிமுகப்படுத்துவதன் மூலம் 2007ஆம் ஆண்டுக்கு முன்பிருந்ததை விட மிக மோசமான அளவில் தமிழக கிராமப்புற ஏழை மாணவர்களின் மருத்துவக் கல்வி வாய்ப்பு நடுவண் அரசால் பறிக்கப்படவுள்ளது. தமிழகத்தில் மாநிலப்பாடத் திட்டத்தின்படி 12ஆம் வகுப்பு தேர்வு எழுதிய 9 லட்சம் பேரில் 4 லட்சம் பேர் மருத்துவப் படிப்பில் சேருவதற்கான உயிரியல் மற்றும் விலங்கியல் பாடம் படித்தவர்கள். அதேநேரத்தில் மத்திய பாடத்திட்டத்தில் 12ஆம் வகுப்பு தேர்வு எழுதிய 12,000 பேரில் 4000 பேர் மட்டுமே உயிரியல் மற்றும் விலங்கியல் பாடம் படித்தவர்கள். ஆனால், மொத்தமுள்ள 3623 மாணவர் சேர்க்கை இடங்களில் 3,300 இடங்களை நடுவண் பாடத்திட்டத்தில் படித்தவர்கள் தான் பிடிக்கப் போகிறார்கள். மாநிலப் பாடத்திட்டத்தில் உயிரியல் பாடம் படித்த 4 லட்சம் பேரில் ஒரு விழுக்காட்டினருக்குக் கூட மருத்துவப் படிப்பில் சேர வாய்ப்புக் கிடைக்கப்போவதில்லை. இதைவிட சமூக நீதிக்கு தீங்கு இழைக்க முடியுமா? தமிழகத்தில் உள்ள 22 மருத்துவக் கல்லூரிகளின் இன்றைய மதிப்பு கிட்டத்தட்ட ரூ.25,000 கோடி ஆகும். தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் அமைக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களை எப்படி சேர்ப்பது என்பதை மாநில அரசு தான் தீர்மானிக்க வேண்டும். ஆனால், இதை நடுவண் அரசு தீர்மானிப்பதை எப்படி ஏற்க முடியும்? இதைவிடக் கொடுமையான அதிகார அத்துமீறல் இருக்க முடியாது. இந்த அத்துமீறலைத் தடுப்பதற்காகத் தான் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிப்பதற்கான சட்டம் பேரவையில் நிறைவேற்றி நடுவண் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிப்ரவரி ஒன்றாம் தேதி நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்கு 90 நாட்களாகியும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெறமுடியவில்லை. நடுவண் அரசுக்கு அழுத்தம் கொடுத்து இந்தச் சட்டத்துக்கு ஒப்புதலைப் பெற தவறிய தமிழக அரசால், ஏராளமான கிராமப்புற மாணவர்களின் மருத்துவர் ஆகும் கனவு தகர்க்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் வெளி மாநில மாணவர்கள் படிப்பது, திறமையான மருத்துவர்களை உருவாக்க மட்டுமே என்றும், திறமைக்கு முன்னுரிமை கொடுப்பதை தமிழகம் ஏன் எதிர்க்க வேண்டும் என்றும் சிலர் கேள்வி எழுப்பலாம். நாடு முழுவதும் திறந்து பரந்த வாய்ப்பு வழங்குவது நம் மாநில மாணவர்களுக்கும் நல்லதுதானே என்று கேள்வி எழுப்பலாம். இங்கே திறமை என்பதை மாணவர்களின் அறிவைக் கொண்டு அளந்தால், எந்த மாநில மாணவர்களைக் காட்டிலும் தமிழக மாணவர்கள் சளைத்தவர்கள் அல்லர் என்பது பல முறை நிரூபிக்கப்பட்டுள்ளது. பாடத் திட்டத்தில்தான் பழுது என்றால், அதை செழுமையாக்கிய பிறகே நீட் தேர்வை நடத்தியிருக்க வேண்டும். இது இரண்டும் இல்லாமல், நட்டாற்றில் நம் மாநில மாணவர்களின் எதிர்காலத்தை குப்புறத் தள்ளுவது சரியல்ல. தமிழகத்தில் தற்போது பொறியியல் கல்லூரிகள் போல மாணவர் சேர்க்கையை விட, சேர்க்கை இடங்கள் அதிகமாக இருக்கும் நிலையில் இதுபோன்ற நீட் தேர்வை நடத்தி, மருத்துவக் கல்லூரிகள் குறைவாக இருக்கும் மாநில மாணவர்களுக்கும் நாம் வாய்ப்பு வழங்குவதில் எந்த தடையும் இல்லை. சில ஆயிரம் மாணவர் சேர்க்கை இடங்களை வைத்துக் கொண்டு, அவற்றையும் நீட் என்ற பெயரில் வெளி மாநில மாணவர்கள் அபகரித்துக் கொள்ள வாய்ப்பை ஏற்படுத்துவது சரியல்ல என்றுதான் தமிழகம் இதுநாள் வரை நீட் தேர்வை எதிர்த்தது. தமிழக மக்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்டு, தமிழகத்தில் தற்போதுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் தமிழக மாணவர்களுக்குச் சேர்க்கை அளிக்காமல், பிற மாநில மாணவர்களுக்கு சேர்க்கை அளிப்பது, நீ அரிசி கொண்டு வா நான் உமி கொண்டு வருகிறேன் இருவரும் ஊதிஊதி தின்னலாம் என்கிற கதையே. இந்தியாவைப் பொறுத்தவரை அதிக மருத்துவக் கல்லூரிகள் இருக்கும் மாநிலம் தமிழகம் மட்டுமே. இதனால், குறைவான மருத்துவக் கல்லூரிகளைக் கொண்ட மாநிலங்களுக்கு இது வரப்பிரசாதமே. அவர்கள் நீட் தேர்வை வரவேற்பார்கள். ஆனால், தமிழக மாணவர்களுக்குத் தேவையான இடங்களை வெளி மாநில மாணவர்களுக்கு விட்டுக் கொடுக்கும் நிலை உருவாகும் என்பதால்தான் தமிழகம் அதை எதிர்த்து வருகிறது. வெளி மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் படித்து முடித்தால், அவர்கள் தமிழகத்தில் பணியாற்ற முடியாது. அவர்களது சொந்த மாநிலங்களுக்குச் சென்று பணியாற்றவே விரும்புவார்கள். அப்படி இருக்கும் போது அடுத்த சில ஆண்டுகளில், தமிழகத்தில் மருத்துவர்களின் எண்ணிக்கை நிச்சயம் குறையும். சரி. வேறு மாநில மாணவர்கள் தமிழகத்தில் மருத்துவர்களாக பணியாற்றினால்... இது மேலும் மோசமான சூழ்நிலையை ஏற்படுத்தும், வேறு எந்தத் தொழிலைக் காட்டிலும், மருத்துவத் தொழிலில் மொழி என்பது மிகவும் தலையாயது. கிராமப் புறங்களில் வெளி மாநில மாணவர்கள் மருத்துவம் பார்ப்பதும், சிகிச்சை அளிப்பதும் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு நிலைமையை மோசமாக்கும். இவ்வளவு சர்ச்சையை தாண்டி, தமிழகத்தில் நீட் தேர்வு நடத்தப்பட்டது. இதில் உள்ள அரசியல் உள்நோக்கத்தைத் தெளிவுபடுத்தியுள்ளது. இதனால், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற முழக்கம் தமிழகத்தின் கல்வி உரிமையை மீட்டெடுக்கும் வரை தொடர்ந்தாக வேண்டும்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



