27,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகத்தில் நெடுஞ்சாலை ஒப்பந்த பணிகளில் ரூ.4,800 கோடி ஊழல் நடந்திருப்பதாகவும், இதில் முதல்வருக்கும் தொடர்பு இருப்பதாகவும் கூறி திமுக குற்றம்சாட்டியது. முதலமைச்சரின் உறவினர்களுக்கு சட்ட விரோதமாக ஒப்பந்தம் வழங்கி முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாக அளித்த புகாரில் லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்காததால், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி உயர்அறங்கூற்றுமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு விசாரணையின்போது, லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் இதுவரை நடைபெற்ற விசாரணை குறித்த வரைவு அறிக்கையை ஊழல் தடுப்புப் பிரிவு இயக்குனருக்கு அனுப்பி இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அவருடைய ஒப்புதலுக்கு பிறகு உயர்அறங்கூற்றுமன்றத்தில்; அந்த அறிக்கையை பதிகை செய்வதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து பதில் மனு பதிகை செய்வதற்கு இன்று வரை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அவகாசம் அளித்து அறங்கூற்றுவர் விசாரணையை ஒத்திவைத்திருந்தார். அதன்படி இன்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் அணியமான அரசு தலைமை வழக்கறிஞர், முதல்வரின் உறவினர்களுக்கு ஒப்பந்தம் ஒதுக்கியதாக கூறப்படுவது அடிப்படை ஆதாரமற்றது என்றும், ஒப்பந்த மதிப்பு உயர்த்தப்படவில்லை என்றும் தெரிவித்தார். ஆனால், தங்கள் தரப்பிடம் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் விசாரிக்கப்படவில்லை என ஆர்எஸ் பாரதியின் வழக்கறிஞர் குற்றம்சாட்டினார். இதையடுத்து, வழக்கு விசாரணை தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அறங்கூற்றுவர் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தார். ஒப்பந்த நடைமுறைகளை லஞ்ச ஒழிப்பு துறை வல்லுநர் குழு ஆய்வு செய்ததா? முதல்வரின் உறவினர் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் ஒதுக்கப்பட்டதா என விசாரித்தீர்களா? என கேள்வி எழுப்பினார். அத்துடன், முதல்வர் மீதான புகார் குறித்து நடத்தப்பட்ட விசாரணை விவரங்கள் அடங்கிய விரிவான அறிக்கையை வரும் திங்கட்கிழமை பதிகை செய்ய உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தார். எழுவர் விடுதலைக்குத் தடையாக, இந்த வழக்கைப் பயன் படுத்திக் கொள்ளப் போகிறதா திமுக என்ற கேள்வியும், அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் உலா வருகிறது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,908.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



