Show all

தர்மபுரியில் பேருந்து ஒன்று தீ வைத்து எரிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை

தர்மபுரியில் பேருந்து ஒன்று தீ வைத்து எரிக்கப்பட்டு, மூன்று பேர் கொல்லப்பட்ட வழக்கில் அ.இ.அ.தி.மு.க. கட்சித் தொண்டர்கள் மூன்று பேருக்கு வழங்கப்பட்டிருந்த மரண தண்டனையை, ஆயுள் தண்டனையாக குறைத்து இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தச் சம்பவம், திட்டமிடப்பட்டு செய்யப்பட்ட கொலை அல்ல என்பதாலும் உணர்ச்சிவசப்பட்ட கும்பல் நடத்திய சம்பவம் என்பதாலும் மரண தண்டனையை, ஆயுள் தண்டனையாக குறைத்துள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், அருண் மிஸ்ரா மற்றும் பிரஃபுல்லா சி பந்த் ஆகியோரை கொண்டிருந்த அமர்வு முன்பாக இன்று நடைபெற்ற விசாரணையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இன்றைய விசாரணையின் போது, மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த முனியப்பன், நெடுஞ்செழியன், மாது என்கிற ரவீந்திரன் ஆகியோரது தரப்பில் வழக்கறிஞர் நாகேஸ்வர ராவ் ஆஜராகி வாதாடினார். அந்த வாதத்தின் போதே, திட்டமிடப்படாத கொலை குற்றம் என்கிற காரணத்திற்காக, மரண தண்டனையை குறைக்க கோரப்பட்டது.

2000வது ஆண்டு, பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கு என்று குறிப்பிட்டப்பட்ட வழக்கில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு தனி நீதிமன்றம் தண்டனை வழங்கி உத்தரவிட்டபோது, பிப்ரவரி இரண்டாம் தேதியன்று தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் வன்முறையில் ஈடுபட்டனர்.

இதில், தர்மபுரியில் வேளாண் பல்கலைக்கழகத்துக்கு சொந்தமான பஸ் ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டது. அந்தப் பேருந்தில் பயணம் செய்த கோகிலவாணி, காயத்ரி, ஹேமலதா ஆகிய மூன்று மாணவிகள் தீயில் கருகி உயிரிழந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட அ.தி.மு.கவைச் சேர்ந்த நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகிய மூன்று பேருக்கும் தூக்கு தண்டனை வழங்கி உத்தரவிட்டது.

இத்தண்டனையை 2007ஆம் ஆண்டில் சென்னை உயர்நீதிமன்றம் உறுதிசெய்தது. 2010ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றமும் இவர்களுக்கான தூக்குத் தண்டனையை உறுதிசெய்தது.

இதே வழக்கில் நீதிமன்றத்தால் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட வேறு இருபத்து ஐந்து பேருக்கு, 2 மாதங்கள் முதல் 2 வருடங்கள் வரையிலான சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டிருந்தது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.