Show all

ஓ.பன்னீர்செல்வம் அணியினரிடையே கடந்த 10 நாட்களாகவே சலசலப்பு! எடப்பாடி பழனிசாமி தயார் ; தினகரன் கையில் முடிவு

18,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தினகரனுக்கு எதிராக அண்மைக் காலங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எதுவும் பேசாமல் இருப்பது ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கலக்கம் அடைய வைத்துள்ளது. அதிமுகவில் இனி சசிகலா குடும்பத்திற்கு இடம் இல்லை என்கிற ஒற்றை முழக்கத்துடன் கடந்த ஆண்டு ஓ.பன்னீர்செல்வம் மற்றும்; எடப்பாடி பழனிசாமி அணிகள் இணைந்தன.

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி தங்களைத் தாங்களே அறிவித்துக் கொண்டனர். அதன் பின்னர் இந்த இருவர் அணி, தினகரன் இடையே மோதல் வெடித்தது.

எடப்பாடி பழனிசாமியை ஒருபுறமும் ஓ.பன்னீர்செல்வத்தை மறுபுறமும் மேடைகளில் தினகரன் விமர்சித்து தெறிக்கவிடுகிறார். ஆனால் கடந்த ஒரு மாதமாகவே தினகரன் எதிர்ப்பு என்கிற நிலைப்பாட்டில் இருந்து எடப்பாடி பழனிசாமி விலகிவிட்டார்.

எந்த மேடையிலும் தினகரனை எடப்பாடி பழனிசாமி விமர்சிப்பதில்லை. ஏன் அவர்களை பற்றி பேசுவது கூட கிடையாது. முன்பெல்லாம் எந்த கொம்பனாலும் அதிமுக அரசை கலைக்க முடியாது என்று பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி  பேசுவார். ஆனால் தற்போதெல்லாம் யாராலும் அதிமுக அரசை அசைக்க முடியாது என்று தனது காட்டத்தை குறைத்துக் கொண்டுள்ளார். இதற்கு எல்லாம் மேலாக மன்னார்குடியில் தினகரன் நடத்திய கூட்டத்திற்கு போட்டியாக அமைச்சர் காமராஜ் நடத்திய பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கவில்லை.

கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்கிற முறையில் ஓ.பன்னீர்செல்வம் மட்டுமே கலந்து கொண்டார். பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வது குறித்து பேசிய போது, தான் பங்கேற்க விரும்பவில்லை என்று எடப்பாடி பழனிசாமி வெளிப்படையாகவே அமைச்சர் காமராஜிடம் கூறிவிட்டதாக தெரிகிறது. மன்னார்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தின் போது தான் எடப்பாடி பழனிசாமியை மிக கடுமையாக விமர்சித்திருந்தார் தினகரன். 

ஆனால் அதற்கு போட்டியாக நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்க கூட எடப்பாடி முன்வராதது தான் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களைச் சந்தேகம் அடைய வைத்துள்ளது. எங்கே மீண்டும் அதிமுகவில் தினகரனை இணைக்கும் முயற்சி நடைபெறுகிறதோ என்று அவர்கள் யோசிக்கத் தொடங்கியுள்ளனர். இதன் வெளிப்பாடாகவே மதுரை திருப்பரங்குன்றத்தில் பேசிய ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் மீண்டும் தினகரனை இணைக்கும் முயற்சி வெற்றி பெறாது என்று கூறியுள்ளார். இதன் காரணமாக ஓ.பன்னீர்செல்வம் அணியினரிடையே கடந்த 10 நாட்களாகவே சலசலப்பு நிலவுகிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,899.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.