14,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தினகரனுடன் சமரசமாக செல்வது தான் நல்லது என்று அதிமுக நிர்வாகிகள் சிலர் வெளிப்படையாகவே தங்களுக்குள் பேசத் தலைப்பட்டுள்ளனர். தர்மயுத்தம் நடத்தி அ.தி.மு.க.வை உடைத்த பன்னீர் செல்வம், பின்னர் சசிகலா மற்றும் தினகரனை ஒதுக்கிய பிறகு கட்சியை எடப்பாடி பழனிச்சாமியுடன் இணைந்து நடத்தி வருகிறார். பாஜக மேலிடத்தின் ஆதரவு இருப்பதால் தற்போது வரை அதிமுக அரசுக்கு பிரச்சனை எதுவும் இல்லை. ஆனால் அதிமுக கட்சி என்று பார்த்தால் ஜெயலலிதா இருந்த போது இருந்த சூழல் தற்போது இல்லை. ஆட்சி வலுவாக இருந்தாலும் கட்சி பலவீனம் அடைந்து வருவது மூத்த நிர்வாகிகளை கலக்கம் அடைய வைத்துள்ளது. இராகிநகர் இடைத் தேர்தலில் அடைந்த தோல்வி அதிமுகவின் பலவீனமான நிலையை வெளி உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியது. இந்த நிலையில் தான் அதிமுகவின் செயற்குழு கடந்த கிழமை நடைபெற்றது. அப்போது பேசிய பலரும் அதிமுக பலவீனமாகி வருவதை கூறியே வருத்தம் அடைந்துள்ளனர். இதற்கு எல்லாம் உச்சமாக நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி என்று வரும் போது மக்கள் செல்வாக்கில், மூன்றாம் நிலையில் உள்ள கட்சிகள் கூட அதிமுகவை விரும்பவில்லை. இவ்வாறாக: தர்மயுத்தத்திற்கு தவறுதாலாக அடிகோலி விட்டோமோ என்று அதிமுகவின் நிருவாக மட்டத்தில் ஆதங்கம் இருந்து வரும் நிலையில், இன்று அதிகாலையே துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மதுரை திருப்பரங்குன்றம் கோயிலில் வழிபாடு செய்ய சென்றிருந்தார். அவருடன் சில முதன்மை அதிமுக நிர்வாகிகள் இருந்தனர். அதேபோல் மதுரை மாவட்ட அதிமுக தொண்டர்களும் நிர்வாகிகளும் இருந்தனர். கோவிலில் வழிபாட்டிற்குப் பின் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்: அதிமுக அமைச்சரவையில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. கட்சியில் இப்போது எந்த குழப்பமும் இல்லை. அமைச்சரவையை மாற்றி அமைப்பது முதல்வரின் தனிப்பட்ட அதிகாரம். அதுகுறித்து அவர்தான் முடிவெடுக்க வேண்டும். அதிமுகவில் விரிசல் என்ற திருநாவுக்கரசர் கூறுவது பகல் கனவு. கட்சி மிகவும் வலுவாக உள்ளது. திருநாவுக்கரசரின் பகல் கனவுக்கு யாரும் விடை சொல்ல முடியாது. நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் கூட்டணி அமையும். அதிமுக கூட்டணியே வெற்றி கூட்டணியாக இருக்கும். கூட்டணி குறித்து விரைவில் பேச்சு நடக்கும். சசிகலா குடும்பத்திற்கு எதிராக நடந்த தர்மயுத்தம் வெற்றி பெற்றுள்ளது. சசிகலாவிற்கு எதிராக அதிமுக வெற்றிபெற்றுள்ளது என்று, தினகரன் மீண்டும் அதிமுகவில் தலையெடுத்து விடக் கூடாது என்கிற தனது அச்சத்தை கொளுத்திப் போட்டிருக்கிறார் உச்சபச்ச கிலியில் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,895.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



