Show all

வாக்கு இல்லை திரும்பி போங்கள் தம்பிதுரை! காலிக் குடங்களுடன் மறியலில் ஈடுபட்டு திருப்பி அனுப்பினர் பெண்கள்.

காலிக் குடங்களுடன் மறியலில் ஈடுபட்டு, வாக்கு சேகரிக்க வந்த தம்பிதுரையை, வாக்கு சேகரிக்க விடாமல் திருப்பி அனுப்பினர் பெண்கள்.

26,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளது வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி. நாடாளுமன்றத் தேர்தலில் இந்தத் தொகுதி கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் வருகிறது. இந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக அதிமுகவைச் சேர்ந்த பரமசிவம் உள்ளார். இந்தத் தொகுதியில் வாக்கு கேட்டு கருத்துப்பரப்புதல் செய்து வருகிறார் தம்பிதுரை. 

இன்று வேடசந்தூர் அருகேயுள்ள லந்தக்கோட்டை கிராமத்துக்கு வாக்கு கேட்டு சென்றார் தம்பிதுரை. அவருடன் வேடசந்தூர் சட்டமன்றஉறுப்பினர் பரமசிவம் மற்றும் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்தவர்கள் சென்றார்கள். ஆனால், ஊரில் நுழைந்ததும் தம்பிதுரையை மக்கள்  முற்றுகையிட்டனர்.

தம்பிதுரையை வாக்கு சேகரிக்க விடாமல், பெண்கள் காலிக் குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். குடிநீருக்காக பல ஆண்டுகளாக போராடி வருகிறோம். பலமுறை மனு கொடுத்தும் பயனில்லை. குடிநீர் கொடுக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. போன முறை ஓட்டு  போட்டோம். ஐந்து ஆண்டு முடிந்து விட்டது இன்னும் எங்கள் பிரச்னைக்கு வழி காணவில்லை. கலங்கிப்போன தண்ணீரை குடித்துக் கொண்டிருக்கிறோம். என்று மக்கள் தெரிவித்தார்கள்.

கடைசி வரை மக்கள் கோபம் அடங்காமல் உரக்க கூச்சலிட்டுக் கொண்டிருந்த  நிலையில், வேறுவழியில்லாமல் அங்கிருந்து திரும்பிச் சென்றார் தம்பிதுரை.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,117.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.