மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்
அளித்துள்ள நிலையில், நடுவண் அரசு அதற்கு அனுமதி அளிக்க கூடாது என்று பாமக வலியுறுத்தி
உள்ளது. இதுகுறித்து
பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘கர்நாடக மாநிலம் ராமநகரம் மாவட்டத்தில்
கனகபுரம் மற்றும் மேகதாது பகுதியில் ரூ.5912 கோடி செலவில் புதிய அணை கட்டும் திட்டத்துக்கு
கர்நாடக அமைச்சரவை நேற்று கொள்கை அடிப்படையில் ஒப்புதல் அளித்திருக்கிறது. நடுவர்
மன்றத் தீர்ப்புக்கு எதிரான இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. மேகதாது அணைத் திட்டத்துக்கு
கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதைத் தொடர்ந்து நடுவண் அரசின் அனுமதிக்காக
மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம், மத்திய நீர்வள ஆணையம், உச்ச நீதிமன்ற ஆணைப்படி அமைக்கப்பட்ட மேற்பார்வைக்குழு
ஆகியவற்றிடம் மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று கர்நாடக
சட்ட அமைச்சர் டி.பி. ஜெயச்சந்திரா தெரிவித்திருக்கிறார். அதைத்
தொடர்ந்து இத்திட்டத்துக்கு நடுவண் அரசு அனுமதி அளித்தால் கர்நாடக அரசு உடனடியாக கட்டுமானப்
பணிகளை தொடங்கிவிடும். அடுத்த சில ஆண்டுகளில் பணிகள் முடிவடைந்து மேகதாது அணை தண்ணீரை
தேக்குவதற்கு வாய்ப்புள்ளது. மேகதாது
அணை விவகாரம் தொடர்பாக மத்திய நீர்வள அமைச்சர் உமாபாரதி கடந்த 9.6.2015 அன்று எனக்கு
எழுதிய கடிதத்தில் மேகதாது அணைக்கான திட்ட அறிக்கையை கர்நாடக அரசு எப்போது தாக்கல்
செய்தாலும், தமிழக அரசின் ஒப்புதல் பெறப்படாத பட்சத்தில் அதற்கு தமது அரசு அனுமதி அளிக்காது
என கூறியிருந்தார். அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், மேகதாது அணைக்கான திட்ட
அறிக்கையை கர்நாடகம் எப்போது தாக்கல் செய்தாலும் அதை மத்திய நீர்வள அமைச்சகமும், சுற்றுச்சூழல்
அமைச்சகமும் நிராகரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். தமிழ்நாட்டில்
5 கோடி மக்களின் பாசன மற்றும் குடிநீர் ஆதாரமாக திகழும் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது
அணை கட்டுவதை பாட்டாளி மக்கள் கட்சி அனுமதிக்காது. இதற்காக எந்த தியாகத்தையும் செய்வதற்கு
பா.ம.க. தயாராக இருக்கிறது. இதற்கெல்லாம் மேலாக காவிரி சார்ந்த அனைத்துப் பிரச்னைகளுக்கும்
தீர்வாக கருதப்படும் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும். என்று வலியுறுத்தி உள்ளார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



