விவசாயிகளுக்கு
ஆதரவாக சென்னை மெரினாவில் மாணவர்கள் திடீரென கடலில் இறங்கி போராட்டம் நடத்தியதால் பெரும்
பதற்றம் ஏற்பட்டது. டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக
சென்னை மெரினாவில் திரண்ட கல்லூரி மாணவர்கள் திடீரென கடலில் இறங்கி போராட்டம் நடத்தினர்.
மெரினாவில் மாணவர்கள் மீண்டும் போராட்டத்தில் குதித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டெல்லியில் கடந்த 15 நாட்களாக தமிழக விவசாயிகள்
போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களைப் பிரதமர் மோடி இதுவரை நேரில் சந்திக்கவில்லை. தமிழக விவசாயிகளின் கோரிக்கையையும் ஏற்கவில்லை.
இந்நிலையில் சல்லிக்கட்டு போராட்டத்தை போல் மாணவர்கள் மீண்டும் மெரினாவில் போராட்டம்
நடத்த உள்ளதாக தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்து கடந்த 2 நாட்களாக மெரினாவில் மாணவர்கள்
ஒன்று கூடுவதை தடுக்க நூற்றுக்கணக்கான காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். இன்றும் சென்னை
மெரினாவில் பலத்த காவல்துறையினர் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆனால் காவல்துறையினரின் தடையையும் தாண்டி மாணவர்கள்
சென்னை மெரினாவில் திரண்டனர். அவர்கள் திடீரென கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளுக்கு ஆதரவாகவும், மீனவர்களைப் பாதுகாக்க
கோரியும் மாணவர்கள் முழக்கமிட்டனர். கடலில் இறங்கிய இந்த மாணவர்களைக் கைது செய்ய காவல்துறையினரும்
கடலில் இறங்கினர். ஆனால் காவல்துறையினர் நெருங்க நெருங்க, மாணவர்கள்
கடலின் உள் பகுதிக்குள் செல்ல தொடங்கியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதனால் காவல்துறையினரும்
செய்வது அறியாமல் தவித்தனர். மீண்டும் மீண்டும் போராடி கடலின் உள்பகுதிக்குச்
சென்ற இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்து அழைத்து சென்றனர். மாணவர்களின் இந்த திடீர்
போராட்டத்தால் சென்னை மெரினாவில் பெரும் பதற்றம் நிலவுகிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



