Show all

திருமுருகன் காந்தி கைதுக்காக பல மாநில காவல்துறை ஒரு மாதமாக தயார் நிலையில்! தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை உலகத்திற்கு தெரிவித்தாராம்

26,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கவன ஈர்ப்பு சுற்றறிக்கை என்பது  குற்ற வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நபர், சொந்த நாட்டை விட்டு வேறு நாடுகளுக்கு பயணம் செல்வதோ அல்லது வெளி நாட்டிலிருந்து உள்நாட்டிற்கு வருவதை தடுக்கும் நோக்கத்துடன், இந்தியக் காவல் துறையால் விடுக்கப்படும் சுற்றறிக்கையாகும். 

குற்றம் சாட்டப்பட்ட நபர் நாட்டை விட்டு தப்பிக்க இயலாதவாறு, வானூர்தி நிலையங்கள், துறைமுகங்கள் போன்ற பன்னாட்டு எல்லைச் சாவடிகளில் செயல்படும் குடிவரவுத் துறை அதிகாரிகளுக்கு கவன அறிவிப்பு சுற்றறிக்கைகள் அனுப்பி வைக்கப்படும்.

கவன அறிவிப்பு சுற்றறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டவரின் புகைப்படம், பெயர், கடவுச் சீட்டு விவரங்கள் இருக்கும். கவன ஈர்ப்பு சுற்றறிக்கையில் குறித்த நபர் வானூர்தி அல்லது கப்பல்களில் பயண செய்ய முற்பட்டால் குடிவரவுத் துறை அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டு, காவல் துறையிடம் ஒப்படைப்பர்.

எதற்கு இந்தக் கதை தெரியுமா? மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை கைது செய்வதற்காக பல மாநில காவல்துறையினர் கடந்த ஒரு மாதமாக தயார் நிலையில் இருந்து உள்ளனர்.

மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி நேற்று அதிகாலை கைது செய்யப்பட்டார். பெங்களூர் விமான நிலையத்தில் இறங்கிய அவரை, குடிவரவு துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

இன்று அவர் தமிழக காவல்துறையால் கைது செய்யப்பட்டு தமிழ்நாடு அழைத்து வரப்படுகிறார். திருமுருகன் காந்தி மீது சரியாக 28 நாட்களுக்கு முன், 'கவன அறிவிப்பு சுற்றறிக்கை' கொடுக்கப்பட்டது. செய்திகளில் வெளிப்படையாக வராத இந்த விசயம், எல்லா மாநில காவல் நிலையத்திற்கும், விமான நிலைய அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளன. இதற்கு அனைத்து மாநில காவல்துறையும் ஒத்துழைக்க வேண்டும் என்று தமிழக காவல்துறை தெரிவித்து இருக்கிறது.

அவரது எல்லைக்கடவு விவரங்கள் இந்தியாவின் அனைத்து விமான நிலையங்களுக்கும் அனுப்பப்பட்டு இருக்கிறது. அவர் எந்த விமான நிலையத்திற்கு வந்தாலும் உடனடியாக அவரை கைது செய்ய வேண்டும் என்று உத்தரவு சென்று இருக்கிறது. அவர் ஐரோப்பாவில் இருந்ததால், கண்டிப்பாக தென்னிந்தியாவில் ஏதாவது ஒரு விமான நிலையத்திற்கு வர வாய்ப்புள்ளது என்பதால், தென்னிந்திய விமான நிலையங்கள் துரிதப் படுத்தப்பட்டுள்ளது.

அவரை கைது செய்ய மாநில நிர்வாகம் மட்டுமில்லாமல், நடுவண் அரசும் முனைப்பு காட்டியுள்ளது. ஐரோப்பாவில், திருமுருகன் காந்தி, தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்து பேசினார். நடுவண் மாநில அரசுகள் சேர்ந்து நடத்திய துப்பாக்கி சூடு என்று 200க்கும் அதிகமான உலக நாட்டு பிரதிநிதிகள் முன் பேசினார். அந்த பேச்சு பலரை ஸ்டெர்லைட் பிரச்சனை குறித்து பேச வைத்துள்ளது.

இதனால் அவரை உடனடியாக கைது செய்ய, 'கவன அறிவிப்பு சுற்றறிக்கை' அளிக்கப்பட்டது. இந்தக் 'கவன அறிவிப்பு சுற்றறிக்கை' மூலம் அவர் எந்த விமான நிலையத்தில் இறங்கினாலும் கைது செய்ய சொல்லி இருக்கிறார்கள். ஸ்டெர்லைட் நிர்வாகம் அவர் மீது மிகுந்த கோபத்தில் இருப்பதாகும், சில நடுவண் மாநில அரசியல் புள்ளிகள் அவரை கைது செய்ய அழுத்தம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சரியாக 27 நாள் காத்திருப்பிற்கு பின் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று இவர் தமிழக காவல்துறையால் கைது செய்யப்பட்டு, சென்னை அழைத்துவரப்பட உள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,875.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.