Show all

மொய்விருந்து! பொருளாதார ஒத்துழைப்பிற்கான தமிழர் கண்டுபிடிப்பு; விடாமல் பின்பற்றி வரும் புதுக்கோட்டை மாவட்டம் தமிழர் பெருமிதம்

04,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120:  மொய் என்பது தமிழர்தம் குடும்பங்களில் நடத்தும் விழாக்களில் கலந்துகொள்பவர்கள் பணமாக அளிக்கும் பொருளாதார ஒத்துழைப்பு ஆகும்.  மொய்யில் இருவகைகள் உண்டு திருமணம், காதுகுத்து, பூப்புனித நீராட்டு விழா போன்ற குடும்ப விழாக்களில் அளிக்கப்படும் மொய் என்பது ஒருவகை, இது குடும்ப அடிப்படையான சுற்றத்தாரிடையே நிகழும் அந்தந்த குடும்ப நிகழ்ச்சிகளுக்கான பொருளாதார ஒத்துழைப்பு ஆகும்.

மற்றொரு வகை சமுதாய அடிப்படையாக ஒரு ஊரில் உள்ள தெரிந்தவர்களோடு ஏற்படுத்திக் கொள்கிற ஒத்துழைப்பு ஆகும். இவ்வாறான சமுதாய அடிப்படையான மொய்கள், பொதுவான விருந்தின் மூலம் முன்னெடுக்கப் படுகிறது.

மொய் விருந்துகள் பெரும்பாலும் ஆடி மாதத்தில் நடத்தப்படும். இந்த வழக்கம் ஒட்டு மொத்த தமிழர் பண்பாட்டு வழக்கம் என்ற போதும், தற்போது இது படிப்படியாக குறைந்து தற்போது தமிழ்நாட்டில், புதுக்கோட்டை மாவட்டமும் அதை ஒட்டிய பகுதிகளிலும் நடத்தப்படுகிறது. மொய் விருந்தில் ஆட்டுக்கறிச் சாப்பாட்டைப் பறிமாறுகிறார்கள். விருந்துக்கு அழைப்பிதழ் அச்சடித்து தெரிந்தவர்களுக்கு எல்லாம் கொடுக்கப்படுகிறது. ஐந்து அல்லது பத்து நபர்கள் சேர்ந்தும் விருந்து நடத்துவர். அனைவரும் பொதுவான அழைப்பிதழ் அடித்து வேண்டியவர்களை அழைப்பர், விருந்து உண்டவர்கள் தாங்கள் விரும்பியவருக்கு மொய் எழுதலாம். விழா முடிந்தபின் விழா ஏற்பாட்டாளர்கள் தங்களுக்கு வந்த மொய்ப்பணத்தின் விகிதாச்சாரத்திற்கு ஏற்ப செலவைப் பங்கிட்டுக் கொள்வார்கள் விருந்துண்டவர்கள் மொய் எழுதவேண்டும் என்ற கட்டாயமும் இல்லை. 

இந்த விருந்துகளில் வைக்கப்படும் மொய்ப் பணத்தை கணக்கு எழுதிவைத்து இந்த மொய்வைத்தவர்கள் மொய் விருந்து வைக்கும்போது அவர்கள் வைத்த மொய்யைவிட கூடுதலாக குறைந்த பட்சம் ஒரு ரூபாய் மட்டுமாவது மொய்யாக வைப்பது வழக்கம்.

பொதுவாக, இந்த விருந்துகளைக் கிராமச் சமூகக் கூடத்திலோ, கோயில் இடத்திலோ நடத்துகிறார்கள். புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்த மொய் விருந்து விழாக்கள் ஆடி மாதத்தோடு முடிவுக்கு வந்தன. மொத்தம் 2 ஆயிரம் பேர் விருந்து நடத்திய நிலையில் ரூ.500 கோடி வரையிலான பொருளாதார ஒத்துழைப்பு கிடைத்ததாக கூறப்படுகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் வடகாடு, மாங்காடு, கொத்தமங்கலம், கீரமங்கலம், செரியலூர், மேற்பனைக்காடு, பனங்குளம், அணவயல் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த பல ஆண்டு காலமாக ஆடி மாதத்தில் மொய் விருந்து நடத்தப்பட்டு வருகிறது.

இப்பகுதிகளில் சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மொய் வரவு செலவு வைத்துள்ளனர். ஆடி மாதத்தில் அன்றாடம் 15-க்கும் மேற்பட்டோர் சேர்ந்தும் தனியாகவும் மொய் விருந்து விழாவை நடத்தி வந்தனர். இவ் விழாக்களுக்கு வருவோருக்கு அசைவ விருந்து பரிமாறப்பட்டது.

கடந்த சில ஆண்டுகளாகவே வேளாண்மை பாதிக்கப்பட்டு வருவதால் அது சார்ந்த தொழில்களும் நலிவடைந்து விட்டன. இதனால், முன்பிருந்த அளவுக்கு மொய் பொருளாதார ஒத்துழைப்பு இல்லாமல் குறைந்து வருவதாக கூறப்டுகிறது.

சிலர் வாங்கிய மொய்யை திருப்பிச் செலுத்த முடியாமல் தடுமாறுகின்ற சமூகச் சூழலும் புதிதாக முளைத்து வருகிறது.

இதுவரை மொய் எழுத, எழுத்தர்கள் வைத்துக் கொள்ளப்பட்டனர். சில ஆண்டுகளாக, மொய் வசூல், கணினியில் பதிவு செய்யப்படுகின்றது. சில இடங்களில் மொய் வைத்தவர்களுக்கு, பற்றுச்சீட்டும் வழங்கப்படுகிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,885.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.