Show all

என்ன மாதிரியான கருத்தியல்! தமிழக அமைச்சரவையை ஆக்கிரமிக்கும் முன்னாள் அதிமுகவினர் எண்மர்

திமுக அமைச்சரவையில் 8 பேர்கள் முன்னாள் அதிமுகவினராக உள்ளனர். நேற்று வரை எதிர் அல்லது மாற்று களத்தில் இருந்தவர்களுக்கு இப்படி சிறப்பு அங்கீகாரம் தருவதான இந்தப் போக்கு, என்னமாதிரியான கருத்தியல்? கொஞ்சம் அலசுவோம். 

24,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123: திமுக அமைச்சரவையில் 8 பேர்கள் முன்னாள் அதிமுகவினராக உள்ளனர். நேற்று வரை எதிர் அல்லது மாற்று களத்தில் இருந்தவர்களுக்கு இப்படி சிறப்பு அங்கீகாரம் தருவதான இந்தப் போக்கு, தமிழர் மரபு சார்ந்த கருத்தியல்தான் என்று நிறுவ இலக்கியச் சான்றுகளோ, வரலாற்றுச் சான்றுகளோ நமக்குக் கிடைக்கவில்லை.

ஐரோப்பியக் காப்பியத்தில், நீயுமா புருட்டஸ், தென்னிந்திய வரலாற்றில், கட்டபொம்மனைக் காட்டிக் கொடுத்ததாக எட்டப்பன், தமிழீழ விடுதலைக்கு முடிவுகட்ட எதிரிகளோடு கைகோர்த்த மாத்தையா இப்படிக் களம் மாறிய பலருக்கு கரும்புள்ளி வைக்கும் வழக்கமே தமிழக மரபாக மட்டுமல்லாமல் உலக மரபாகவும் இருந்து வருகிறது. 

ஆனால் ஆரியத் தொன்மமான இராமயணத்தில், களம் மாறிய இலங்கை வேந்தன் இராவணின் தம்பி விபிஷணனுக்கு சிறப்பான அங்கீகாரம் தரப்படுவதுதான் உலக வரலாற்றில் களம் மாறியவருக்கு கிடைத்த முதல் அங்கீகாரம். இராவணனை வெற்றி கொண்ட இராமன், இராவணனிடம் இருந்து வென்ற ஆட்சிப்பகுதிக்கு விபிஷசணனுக்கு முடிசூட்டி அங்கீகாரம் கொடுக்கிறார்.

அந்த வகையான ஒரு யுக்திதான் அதிமுகவை சேர்ந்த எண்மருக்கு அமைச்சர் பதவி வழங்குகிற ஸ்டாலின் அவர்களின் யுக்தி. ஆரியத் தொன்ம அடிப்படையில் இதை இராஜதந்திரம் என்றெல்லாம் சொல்லி மலைக்கலாம். ஆனால் தமிழ் மரபு அடிப்படையிலும் சரி, உலக மரபிலும் சரி இது திமுகவுக்கு ஒரு சறுக்கல்தான். மிக எளிதாகவே இந்தச் சறுக்கலில் திமுகவால் சமாளிக்க முடிந்தாலும் கூட.  

அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்த சில நாட்களிலேயே செந்தில் பாலாஜிக்கும், தங்க தமிழ்ச்செல்வனுக்கும் மாவட்டச் செயலாளர் பதவி அளிக்கப்பட்டது. சட்டப்பேரவைத் தேர்தலிலும் வாய்ப்பளிக்கப்பட்டது. இதற்கு முன் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், எ.வ.வேலு, சேகர் பாபு உள்ளிட்டோரைச் சொல்லலாம்.

இந்நிலையில் இந்தத் தேர்தலில் வென்று ஆட்சியமைக்கும் திமுகவில் அமைச்சராகப் பதவி ஏற்கும் 33 பேரில் 8 பேர், அதாவது 24விழுக்காட்டு பேர்கள் அதிமுகவிலிருந்து திமுகவுக்கு வந்தவர்கள் ஆவர். இவர்களில் சிலர் முன்னரே திமுக அமைச்சரவையில் இடம் பெற்றவர்கள் ஆவர் என்று மீசையில் மண் ஒட்டாத காரணத்தையும் பொருத்தலாம்.

தற்போதைய அமைச்சரவையில் பொறுப்பேற்போரில் முன்னாள் அதிமுகவினர் குறித்த விவரம்:
1. எ.வ.வேலு - பொதுப்பணித்துறை அமைச்சர்
2. கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் - வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர்
3. எஸ்.ரகுபதி - சட்டத்துறை அமைச்சர்
4. முத்துசாமி - வீட்டுவசதித்துறை அமைச்சர்
5. அனிதா ராதாகிருஷ்ணன் - மீன் வளம், மீனவர் நலத்துறை, கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர்.
6. ராஜகண்ணப்பன் - போக்குவரத்துத் துறை அமைச்சர்
7. செந்தில் பாலாஜி - மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்
8. சேகர் பாபு - ஹிந்துசமய அறநிலையத்துறை அமைச்சர்

இவர்கள் 8 பேரும் முன்னால் அதிமுகவினர் ஆவர். இவர்கள் அதிமுகவிலிருந்து வந்திருந்தாலும் திமுகவில் மிகப்பெரிய வெற்றிக்குக் காரணமாக அமைந்தவர்களாம். எ.வ.வேலு, செந்தில்பாலாஜி, ராஜகண்ணப்பன் உள்ளிட்டோர் அவர்கள் மாவட்டம் தாண்டி பக்கத்து மாவட்டங்களையும் கவனித்து திமுக வெற்றிக்குத் துணை நின்றவர்கள் என்றெல்லாம்  குறிப்பிடப்படுகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.