Show all

நவம்பர் 17க்குள் உள்ளாட்சித் தேர்தல்

உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு (2016) செப்டம்பர் மாதம் வெளியிட்டிருந்தது. இந்தத் தேர்தலில் பழங்குடியினருக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை எனக் கூறி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உயர்அறங்கூற்று மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த அறங்கூற்றுவர் என்.கிருபாகரன், தமிழ்நாடு பஞ்சாயத்து சட்ட விதிகளை முறையாகப் பின்பற்றி தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படவில்லை என்றுகூறி உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டார்.

மேலும் 2016-ஆம் ஆண்டு டிசம்பருக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிப்பது, குற்றப் பின்னணி உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிடுவதைத் தடுப்பது உள்ளிட்ட 9 நிபந்தனைகளை விதித்து கடந்த ஆண்டு உத்தரவிட்டார்.

தனி அறங்கூற்றுவரின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து மாநிலத் தேர்தல் ஆணையமும், தமிழக அரசும் உயர் அறங்கூற்று மன்றத்தில் மேல்முறையீடு செய்தன. அதே போன்று உள்ளாட்சி அமைப்புகளுக்காக நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரிகளின் பதவிக் காலத்தை நீட்டிக்கக்கூடாது என சமூக ஆர்வலர் பாடம் நாராயணனும், உள்ளாட்சி அமைப்புகளில் துணை மாநகரத் தந்தை மற்றும் துணைத் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்குத் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு உரிய இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென வழக்குரைஞர் எம்.பழனிமுத்துவும் மனு தாக்கல் செய்தனர்.

இம்மனுக்கள் மீதான விசாரணை தலைமை அறங்கூற்றுவர் அடங்கிய அமர்வில் நடந்து வந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான உத்தேச காலஅட்டவணையை மூடி முத்திரையிடப்பட்ட உறையில் அறங்கூற்றுவர்களிடம் மாநிலத் தேர்தல் ஆணையம் கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதி தாக்கல் செய்தது.

தலைமை அறங்கூற்றுவர் இந்திராபானர்ஜி மற்றும் அறங்கூற்றுவர் எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு முன் இந்த வழக்கு தீர்ப்புக்காக வந்தது. அப்போது அணியமான அரசின் தலைமை வழக்குரைஞர் விஜய்நாராயண், தமிழக அரசு 2011 மக்கள் தொகை அடிப்படையில் ஊர் பிரிவுகளை மறுவரையறை செய்யும் பணியைத் தொடங்கிவிட்டது. இதுதொடர்பாக புதிதாக அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே, இந்தச் சூழலில் தற்போது தீர்ப்பளிக்க வேண்டாம் என்றார். அதற்கு திமுக தரப்பு வழக்குரைஞர் எதிர்ப்புத் தெரிவித்தார்.

உள்ளாட்சி அமைப்புகள்தான் சமூகத்தின் உயிர் நாடி. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை அந்த அமைப்புகளுக்குக் கட்டாயம் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். தற்போது ஓராண்டு காலம் வீணடிக்கப்பட்டு விட்டது. தமிழகத்தில் நிலவும் கடும் வறட்சி, குடிநீர் தட்டுப்பாடு, விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் ஆகியவற்றை உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் இருப்பதற்கான காரணங்களாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்தக் காரணங்கள் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை. அதுபோல வரும் டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் வார்டு மறுவரையறைப் பணிகளை முடித்து 2018 ஜனவரிக்குள் தேர்தலை நடத்தி முடித்து விடுவோம் என மாநில தேர்தல் ஆணையம் கூறியதையும் ஏற்க முடியாது.

இந்த வழக்கில் தனி அறங்கூற்றுவர் பிறப்பித்த 9 நிபந்தனைகளில் 4 நிபந்தனைகளை ஏற்பதில் எந்தப் பிரச்னையும் இல்லை. குறிப்பாக குற்றப் பிண்ணனி உடைய வேட்பாளர்களை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் அவர்களின் வேட்புமனுக்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம். ஆனால் சுமார் 4 லட்சம் வேட்புமனுக்களையும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது என்பது தொழில்நுட்ப ரீதியாக இயலாத காரியம் என்றாலும் தேவையான மனுக்களைப் பதிவேற்றம் செய்யலாம்.

எனவே, வரும் செப்டம்பர் 18-ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பை மாநிலத் தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும். அதன் பிறகு நவம்பர் 17-ஆம் தேதிக்குள் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். ஆனால், இந்தத் தீர்ப்பானது உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் இறுதி உத்தரவுக்குக் கட்டுப்பட்டது.

என்றவாறு தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நவம்பர் 17-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க சென்னை உயர் அறங்கூற்று மன்றம் உத்தரவிட்டுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.