ஈரோட்டில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்றுவரும் தாய்லாந்து நாட்டினருடன் நெருக்கமாக இருந்ததால்தான் மதுரை நபருக்கும் நோய் பரவிவிட்டதையும், தற்போது அவர் கொரோனாவிற்கு தமிழகத்தில் முதல்பலியாகி விட்டதையும் அமைச்சர் விஜயபாஸ்கர் வருத்தத்தோடு பதவு செய்கிறார். 12,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா பாதித்த மதுரை நபர் எங்கெல்லாம் போனார், யாரையெல்லாம் சந்தித்தார் என்ற விவரங்களையெல்லாம் திரட்டியுள்ளோம். அவர் வெளிநாட்டுக்குச் செல்லாமல் அவருக்கு கொரோனா வந்திருந்தது. இது எப்படியென ஆய்வு செய்ததில் ஈரோட்டில் ஏற்கெனவே கொரோனா பாதித்து பெருந்துறையில் சிகிச்சை பெற்று வரும் தாய்லாந்து நாட்டினருடன் இந்த நபர் நெருங்கு பழகியிருந்தார் என்பதான அதிர்ச்சி தரும் செய்தி நமக்கு விடையாகக் கிடைத்தது என்று தெரிவித்தார் தமிழக நலங்குத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். இந்த நிலையில் நலங்குத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் இதுவரை 18 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்துள்ளோம். இவர்களை ஆய்வு செய்து பார்த்ததில் கணவனிடம் இருந்து மனைவிக்கு, மனைவியிடம் இருந்து கணவனுக்கும் பரவியுள்ளது. இலண்டனில் இருந்து வந்த ஒருவருக்கு தொடக்கத்தில் அறிகுறி ஏதும் இல்லை. சில நாட்கள் கழித்து அவருக்கு நோய் இருப்பது உறுதியான நிலையில் அவரது தாயாருக்கும் நோய் தொற்று உறுதியானது. நான் ஏற்கெனவே சொல்லியது போல் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட காலக்கெடு வரை வீட்டில் இருக்க வேண்டும். இது வேண்டுகோள் அல்ல. அரசின் உத்தரவு ஆகும். மிகவும் உயிர்க் கொல்லியான கொரோனா மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்கவே இவர்களை தனிமைப்படுத்தியுள்ளோம். ஆனால் இவர்கள் வெளியே வருகிறார்கள் என்றால் என்ன பொருள். இது மிகவும் கண்டனத்துக்குரியது. நோய் அறிகுறி தெரியாவிட்டாலும் தனியாகத்தான் இருக்க வேண்டும். அந்த அறிகுறிகள் தாமதமாகக் கூட அதாவது 14 நாட்களுக்குள் தெரியும். எனவே நான் மிகவும் வலியுறுத்தி சொல்கிறேன். தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் யாரேனும் வெளியே சுற்றுவதை பார்த்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கெனவே அவர்களது எல்லைக்கடவுகள் முடக்கப்படும் என கூறியுள்ளோம். வீடு தேடி அனைத்தும் வரும். அவர்களுக்கு மருத்துவர், காவலர்கள், சடுதிவண்டி என அனைவரின் எண்களும் கொடுத்துள்ளோம். வேறென்ன வேண்டும். உங்களால் ஒருவருக்கு நோய் பரவும் என தெரிந்தும் அலட்சியமாக சுற்றிவிட்டு நோய் பரவ காரணமாக இருந்தால் அதுவும் குற்றமே.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.