Show all

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் மீதான நடுவண் குற்றப் புலனாய்வுத் துறை விசாரணை இன்று தொடங்கியது! தமிழக அரசு மேல்முறையீடு

28,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிட வலியுறுத்தி பல போராட்டங்கள் நடைபெற்றுவந்தன. இந்தப் போராட்டத்தின் 100-வது நாளான முற்றுகைப் போராட்டத்தில், காவல்துறையினர்  நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக தமிழக அரசு, ஓய்வுபெற்ற உயர் அறங்கூற்றுமன்ற அறங்கூற்றுவர் அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணையத்தை நியமித்தது. இந்த ஆணையம், கடந்த ஐந்து மாதங்களாக தனது விசாரணையை நடத்திவருகிறது.

இந்த நிலையில், துப்பாக்கிச் சூடு சம்பந்தமான வழக்குகளை நடுவண் குற்றப் புலனாய்வுத் துறை விசாரணைக்கு மாற்றக் கோரி, உயர்அறங்கூற்றுமன்ற மதுரைக் கிளையில், 15க்கும் மேற்பட்ட பொதுநலன் மனுக்கள் பதிகை செய்யப்பட்டன. இவற்றை விசாரித்த அறங்கூற்றுவர்கள் செல்வம் மற்றும் பஷீர் அகமது ஆகியோர் அமர்வு, இச்சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் நடுவண் குற்றப் புலனாய்வுத் துறைக்கு மாற்றி, மூன்று மாதங்களுக்கு முன்பு உத்தரவிட்டது. இதையடுத்து, குற்றவியல் ஆய்வு துறை காவலர்கள்  நடுவண் குற்றப்புலனாய்வத் துறையிடம் ஆவணங்களை சில நாட்களுக்கு முன்பு ஒப்படைத்தனர். நடுவண் குற்றப் புலனாய்வுத் துறை துணைக் கண்காணிப்பாளர் ரவி தலைமையிலான குழுவினர், இது தொடர்பாக இன்று தூத்துக்குடியில் விசாரணையைத் தொடங்கி உள்ளனர். முதல் கட்டமாக 20 அமைப்புகள்மீது 12 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளது.

இந்நிலையில்,  இதை எதிர்த்து தமிழக அரசு உச்ச அறங்கூற்றுமன்றத்தில் மேல்முறையீடு மனு பதிகை செய்துள்ளது. அந்த மனுவில், துப்பாக்கிச் சூடு சம்பவம் பற்றி விசாரணை செய்ய தமிழக அரசு ஒருநபர் ஆணையம் அமைத்துள்ளது. இந்நிலையில், இந்த வழக்கை நடுவண் குற்றப் புலனாய்வுத் துறை விசாரணைக்கு மாற்றியது தேவை இல்லாத ஒன்று. இந்த உத்தரவை ரத்துசெய்ய வேண்டும்; மீண்டும் தமிழக அரசே விசாரணை நடத்திட உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.  

 -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,940.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.