தேவை ஏற்பட்டால்
அரசியலுக்கு வரவும் தயார் என்று நடிகர் ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார். சல்லிக்கட்டு போராட்டத்திற்கு மிகப்பெரிய வெற்றி
கிடைத்துள்ளது என நடிகர் ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார். மேலும் தேவை ஏற்பட்டால் அரசியலுக்கு
வரத் தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். சல்லிக்கட்டு மீதான
தடையை நீக்கக்கோரி எந்த தலைமையும் இல்லாமல், சமூக வலைத்தளங்கள் மூலம் ஒன்றிணைந்த இளைஞர்கள்
மற்றும் மாணவர்கள் சென்னை மெரினா கடற்கரையில் ஒன்றுகூடி, அமைதியான வழியில் புரட்சி
போராட்டம் நடத்தினர். இதில் பங்கேற்க வந்த சில அரசியல்வாதிகளை மாணவர்கள் அனுமதிக்கவில்லை.
நடிகர்களும் வர வேண்டாம் என அவர்கள் கூறியிருந்தனர். ஆனால், அவர்களின் போராட்டத்தில் பங்கு பெற நடிகர்
லாரன்ஸ் உள்ளிட்ட சிலரை மட்டும் அவர்கள் அனுமதித்தனர். அவர் சமூகத்திற்கு பல்வேறு உதவிகளை
செய்து வருகிறார் என்பதால் அவரை மட்டும் ஏற்றுக்கொண்டனர். இந்தநிலையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த
ராகவா லாரன்ஸ் கூறுகையில், சல்லிக்கட்டு போராட்டத்திற்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது.
தாக்குதலில் இளைஞர்கள் பலர் காயமடைந்துள்ளனர். அவர்களுக்கு அரசு நிதியுதவி அளிக்க வேண்டும்
என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், தேவை ஏற்பட்டால் அரசியலுக்கு வரத்தயார்
எனவும், இளைஞர்கள், மாணவர்கள் முடிவெடுத்தால் அனைத்து தொகுதியிலும் அரசியலில் நிற்போம்
என்றும் கூறியுள்ள லாரனஸ், நாங்கள் வரவேண்டுமா இல்லையா என்பதை இளைஞர்கள்தான் முடிவு
செய்வார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



