இந்திய சாரணர் மற்றும் சாரணியர் இயக்கத்தின் தமிழ்நாடு மாநிலத்த தலைவருக்கான தேர்தல் வரும் செப்டம்பர் 16 அன்று நடைபெறவுள்ளது. மனு பதிகை செய்திருந்த ஐந்து பேரில், தற்போது எச்.ராஜா மற்றும் முன்னாள் பள்ளி கல்வி துறை இயக்குனர் பி.மணி ஆகியோர் மட்டுமே களத்தில் உள்ளனர். மற்ற மூவரும் போட்டியில் இருந்து விலகிக்கொண்டனர். இந்தப் போட்டியில் கலந்து கொள்வது ஏன் என்று மணி அவர்கள் தெரிவித்த போது தமிழகத்தின் பள்ளிக் கல்வித் துறையின் தரத்தை மேம்படுத்தும் நோக்குடனேயே தான் இப்பதவிக்குப் போட்டியிடுவதாகவும், இப்பதவிக்கான தேர்தலைச் சுற்றி நடக்கும் அரசியலுக்கும் தமக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை என்றும் கூறினார். மேற்கொண்டு பேசிய அவர், மற்ற மூவரும் தங்கள் வேட்பு மனுக்களைத் திரும்பப்பெற்றுக் கொண்டதற்கான காரணம் தமக்குத் தெரியாது என்றும் கூறியுள்ளார். சாரணியர் இயக்க தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட உள்ளதாக பாஜகவை சேர்ந்த எச்.ராஜாவும் தெரிவித்துள்ளார். இது தமிழர் நலம் விரும்பும் சமூக ஆர்வலர்கள், மற்றும் தமிழக அரசியல் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மோடி பதவி ஏற்றதிலிருந்தே, தமிழ், தமிழர் அடிப்படைகள், தமிழர் வாழ்வாதரம் ஆகியன படிப்படியாக சிதைக்கப் பட்டு வருவது உள்ளங்கை நெல்லிக்கனி. அதற்கு தமிழக பாஜக தலைவர்கள் சோரம் போவதும், எளிய நடுநிலையான தமிழ் மக்களை மூளைச் சலவை செய்வதும் தொடர்கதை. சாரணர் இயக்கத்திற்கு எச்.ராஜா தலைமை ஏற்கும் பட்சத்தில், சாரணர் இயக்கத்தை பாஜக அடிப்படைக்கு மாற்ற உறுதியாக வாய்ப்பு இருக்கிறது. அதற்காகவே பாஜக இந்த முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது என்பது, தமிழர் நலம் விரும்பும் சமூக ஆர்வலர்கள், மற்றும் தமிழக அரசியல் கட்சிகளுக்குப் புரிந்து விட்டது. மாணவர்கள் நெஞ்சில், காவி நஞ்சை கலக்கும் வகையில் எச்.ராஜாவுக்கு சாரணர்-சாரணியர் தலைவர் பதவியை வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக திமுக செயல் தலைவர் குற்றம் சாட்டியுள்ளார். ‘நீலச் சட்டை அணியும் அந்த இயக்கத்தைக் காக்கி கால்சட்டை கொடுத்து சங்பரிவார் இயக்கமாக மாற்றும் முயற்சி வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற மோசமான விளைவுகளை உண்டாக்கும் முயற்சியை அரசுகள் கைவிட வேண்டும்’ என்று பசுமைத் தமிழகம் கட்சி கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, பசுமைத்தமிழகம் கட்சியின் தலைவரான சுப.உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சாரணர், சாரணியர் இயக்கத்துக்கு பாஜக ஹெச்.ராஜாவை நியமிக்க பாசிச அடிமை அரசு துடிப்பதன்மூலம் பள்ளி மாணவ, மாணவிகள் அனைவருக்கும் ஆர்.எஸ்.எஸ்-ஸின் காக்கி டவுசரும், அதன் கொள்கைகளும் கொடுத்து, அடுத்த தலைமுறையினருக்கு ஆர்.எஸ்.எஸ்-ஸின் சித்தாந்தங்களை விதைக்க பா.ஜ.க அரசு மறைமுகமாக முயல்கிறது. தமிழக அரசை நிர்பந்தித்து,பிஞ்சுக் குழந்தைகளின் மத்தியில் நஞ்சை விதைக்கத் துடிக்கிறது. பேனாக்களும் புத்தகங்களும், நோட்டுகளும் தூக்கவேண்டிய வயதில், கத்திகளைத் தூக்கி, புத்திக்கூர்மையை மழுங்கடித்து, இந்துத்துவா விதைகளை விதைத்து, தமிழகமெங்கும் காவி மையத்தைப் பள்ளிகளிலிருந்து தொடங்க பி.ஜே.பி திட்டமிடுகிறது. வரலாற்றுச் சிறப்பு மிக்க சாரண, சாரணியர் இயக்கத்தில், காவியைத் தூக்கிப் பிடிப்பதோடு, மதக்கலவரத்தையும் சாதிக் கலவரத்தையும் தூண்டும் விதத்தில் தொடர்ந்து பேசிவருகிறது. போராளிகளை மட்டுமல்லாமல் கேள்வி கேட்கும் பத்திரிகையாளர்களைத் தேசவிரோதிகளாகப் பேசிவரும் பி.ஜே.பி-யின் ஹெச். ராஜாவை நியமிக்க என்ன தகுதி இருக்கிறது’ என்று கூறியுள்ளார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.