இடைக்காலத் தடையை மீறி போராட்டம் நடத்தி வரும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது அத்தியாவசிய தேவை பராமரிப்புச் சட்டத்தை அமல்படுத்தலாமா, எச்சரிக்கைஆணை கொடுக்கலாமா என அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அரசு விடுத்த எச்சரிக்கை, அறங்கூற்றுமன்றம் விதித்த இடைக்கால தடை உத்தரவுகளை மீறி அரசு ஊழியர் ஆசிரியர் கூட்டமைப்பினர் தமிழகம் முழுவதும் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி போராட்டத்தை தீவிரப்படுத்துவது என்றும், 12 அன்று மாவட்டத் தலைநகரங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது என்றும், 13 அன்று மாவட்ட தலைநகரங்களில் காத்திருப்பு மற்றும் உள்ளிருப்பு போராட்டங்களை நடத்துவது என்றும் முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது. இதனிடையே, 7 மற்றும் 8 ல் போராட்டத்தில் கலந்து கொண்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 9 அன்று அரசு தரப்பில் 17-எ அறிக்கை அனுப்பி மிரட்டல் விடுக்கப்பட்டது. ஆனால், அரசு ஊழியர் ஆசிரியர் கூட்டமைப்பினர் அந்த அறிக்கை குறித்து கவலைப்படவில்லை. இதையடுத்து தங்களது போராட்டங்களை வலுப்படுத்திய அரசு ஊழியர் ஆசிரியர் கூட்டமைப்பினர், எஸ்மா, டெஸ்மா போன்ற சட்டங்கள் எங்கள் மீது பாய்ந்தாலும் தொடர்ந்து போராட்டம் நடத்துவோம். எங்கள் கோரிக்கை மீது முதல்வர் உறுதிமொழி அளிக்க வேண்டும். உறுதிமொழி அளிக்காவிட்டால் எங்களது போராட்டம் தொடரும். இன்று தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடக்கும். அதற்கு பிறகும் நடவடிக்கை எடுக்காவிட்டால் உள்ளிருப்பு போராட்டம் நடத்துவோம். அரசின் எந்த மிரட்டலுக்கும் பயப்பட மாட்டோம் என்று தெரிவித்தனர். இந்நிலையில், போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளவர்களின் பட்டியலை அரசு தயார் செய்து வருவதாகவும், அதன்படி நேற்று பணிக்கு வராத 65 ஆயிரம் அரசு ஊழியர்கள் மீதும், 60 ஆயிரம் ஆசிரியர்கள் மீது அத்தியாவசிய தேவை பராமரிப்புச் சட்டத்தை பயன்படுத்தலாமா, எச்சரிக்கை அறிக்கை கொடுக்கலாமா என்பது குறித்து அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. செயலலிதா ஆட்சியில், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது அத்தியாவசிய தேவை பராமரிப்புச் சட்டம் பாய்ந்த போது ஒட்டு மொத்த ஆசிரியர்கள், மற்றும் அரசு ஊழியர்களும் கதிகலங்கிப் போனார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.