36000 கொரோனா அதிவிரைவு அடையாளங்காட்டிகள் கிடைத்த நிலையில் தமிழக நலங்குத் துறை கொரோனா பரிசோதனைகளை விரைவு படுத்தியிருக்கிறது. இந்த 36000 கொரோனா அதிவிரைவு அடையாளங்காட்டிகளும் மிகச் சில நாட்களில் தீர்ந்து விடும. அடுத்த என்ன என்ற எதிர்பார்ப்பில் தமிழக நலங்குத்துறை காத்திருக்கிறது. 06,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: கொரோனா தொற்று இந்தியாவில் வேகமாக பரவி வரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளில் தமிழகம் முன்னோடி மாநிலமாகவே திகழ்ந்து வருகிறது. இந்நிலையில் கொரோனா பரிசோதனையை அதிகமானோருக்கு அதிவிரைவாக மேற்கொள்ள வேண்டி சீனாவில் இருந்து கொரோனா அதிவிரைவு அடையாளங்காட்டிகள் வாங்க தமிழக அரசு கேட்பு கொடுத்துள்ளது. இந்தக் கொரோனா அதிவிரைவு அடையாளங்காட்டிகள், இன்னும் முழுமையாக தமிழகத்திற்கு வந்து சேராத நிலையில், அதன் விலை குறித்து ஒப்பீட்டு அளவில் புரிதல் இல்லாத சர்ச்சை எழுப்பப்பட்டு வருகிறது. இந்தியாவில் முதலாவது மாநிலமாக தமிழகம், பெரும் எண்ணிக்கையிலான மக்களுக்கு, வேகமாக சோதனை செய்யும் வகைக்கு என்று கொரோனா அதிவிரைவு அடையாளங்காட்டிகளை சீனாவில் 500000 பேழைகளுக்கு கேட்பு தெரிவித்திருந்தது. பல்வேறு இடர்பாடுகளுக்கிடையே சீனாவிலிருந்து 24,000 பரிசோதனைப் பேழைகளும் நடுவண் அரசுக்கு வந்தவற்றில் 12 ஆயிரம் பரிசோதனைப் பேழைகளும் நேற்று தமிழகத்திற்கு வந்த நிலையில், நேற்றே அந்தப் பரிசோதனைப் பேழைகள் மூலம் பரிசோதனைகள் தொடங்கப்பட்டு விட்டன. தற்போதைய சிக்கல் என்னவென்றால், தமிழகத்திற்கு கிடைத்துள்ள 36000 கொரோனா அதிவிரைவு அடையாளங்காட்டிகளும் இன்னும் மூன்று அல்லது நான்கு நாட்களில், 36000 பேர்களுக்கு சோதனை செய்யப்பட்டு தீர்ந்து போகப்போகின்றன. இன்னும் பலஇலட்சம் பேர்களுக்கு தமிழகத்தில் கொரோன பரிசோதனை தேவையாய் இருக்கிறது. அதற்கு கேட்பு வழங்கியுள்ள பலஇலட்சம் கொரோனா அதிவிரைவு அடையாளங்காட்டிகளும் எப்போது வரும் அல்லது எப்போது நடுவண் அரசு பெற்றுத்தரும் என்ற எதிர்பார்ப்பு தமிழக நலங்குத் துறையினரிடம் எழுந்துள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.