Show all

அதிமுகவை உடைக்க ஆளுநர் சதி செய்வதாக சசிகலா பரபரப்பு புகார்

அதிமுகவை உடைக்க ஆளுநர் சதி செய்வதாக சசிகலா பரபரப்பு புகார். கூவத்தூரில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் சசிகலா சென்னை போயஸ் தோட்டம் வந்தடைந்தார்.

     அதிமுகவை உடைக்க தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் சதி செய்வதாக அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா பரபரப்பு புகார் கூறியுள்ளார். ஆளுநர் காலம் தாழ்த்துவது கட்சியை பிளவுபடுத்தும் நடவடிக்கை எனவும் அவர் தெரிவித்துள்ளார். சசிகலா இன்று பிற்பகல் கூவத்தூர் சென்று உல்லாச மாளிகையில் தங்க வைக்கப்பட்டிருக்கும் தனது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அவருடன், செங்கோட்டையன், தம்பிதுரை, எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அமைச்சர்களும் ஆலோசனையில் பங்கேற்றனர்.

     ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர்களையும் தனித் தனியாக சந்தித்து ஆலோசனை நடத்திய சசிகலா, அவர்களின் மனதில் உள்ளதை வெளிப்படையாக கூறுமாறு கேட்டுள்ளார். குறிப்பாக மக்களிடம் தனக்கு எந்த அளவுக்கு ஆதரவு இருக்கிறது. கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் யார் முதல்வராக வரவேண்டும் என நினைக்கின்றனர், என பல கேள்விகளை சட்டமன்ற உறுப்பினர்களிடம் எழுப்பியுள்ளார். சட்டமன்ற உறுப்பினர்களும், சசிகலாவிடம் தங்களது தனிப்பட்ட விருப்பத்தை தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ஆலோசனைக் கூட்டத்தை முடித்துக் கொண்டு போயஸ் தோட்டம் திரும்பிய சசிகலா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மன உறுதியுடன் உள்ளனர். சட்டமன்ற உறுப்பினர்களுடான சந்திப்பு மனநிறைவாக இருந்தது. ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்காமல் ஆளுநர் காலம் கடத்துவது கட்சியைப் பிளவுபடுத்தும் நடவடிக்கையாக கருதுகிறேன். இதுவரை பொறுமையாக இருந்தோம். நாளை வேறு விதமாக போராடுவோம் என்றார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.