முன்னாள் தலைமை அமைச்சர் ராஜிவ் காந்தி 1991-ஆம் ஆண்டு, மே 21அன்று மனித வெடிகுண்டு மூலம் திருபெரும்புதூரில் கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில் நளினி, முருகன் மற்றும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இவர்களுக்கு முதலில் தூக்கு தணடனை விதிக்கப்பட்டது. பின்னர் மேல் முறையீட்டில் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. ஆனால் ஏறக்குறைய கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடி வரும் அவரை விடுதலை செய்யக் கோரி அவரது தயார் அற்புதம்மாள் தமிழக முதல்வர்களிடம் தொடர்ச்சியாக கோரிக்கை வைத்து வந்தார். அல்லது குறைந்த பட்சம் பரோலிலாவது விடுவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வந்தார். ரோம் பன்னாட்டு குற்றவியல் சட்டத்தின் 110ஆவது விதிகளின்படி போர் குற்றங்கள், இனவழிப்பு போன்ற தீவிரமான குற்றங்கள் புரிந்த ஒருவர் குறைந்தது மூன்றில் இருபங்கு காலம் அல்லது 25 ஆண்டுகள் சிறையில் கழிக்க வேண்டும் எனக் கூறுகிறது. இதன்பிறகு நீதிமன்றம் மறுஆய்வு செய்து தண்டனையைக் குறைக்கலாம். சமீபத்தில் அவரது தந்தை உடல்நலக் குறைவால் வாடுவதால் அவருக்கு பரோல் அளிக்க வேண்டும் என்று அரசிடம் அவரது தாயார் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில் பேரறிவாளனை பரோலில் விடுவிக்க தமிழக அரசு தற்பொழுது உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒரு மாத காலத்திற்கு பரோல் வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டு வேலூர் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அது கிடைத்தவுடன் அவர் உடனடியாக விடுவிக்கப்படுவார் என்று தெரிகிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



