07,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18சட்டமன்ற உறுப்பினர்களின் வழக்கில் இரண்டு அறங்கூற்றுவர்கள் மாறுபட்ட தீர்ப்பு கூறியதால் 3-வது அறங்கூற்றுவராக விமலா நியமிக்கப்பட்டார். ஆனால் அவரை உச்ச அறங்கூற்றுமன்றம் மாற்றிவிட்டு சத்யநாராயணனை 3-வது அறங்கூற்றுவராக நியமித்துள்ளது. புதிய அறங்கூற்றுவர் சத்ய நாராயணன் முன்னிலையில் வழக்கு இன்றைக்கு விசாரணைக்கு வருகிறது. இன்று முதல் வரும் வெள்ளி கிழமை வரை 5 நாட்கள் தொடர்ந்து விசாரணை நடத்தப்படும் என்றும் அறங்கூற்றுவர் சத்தியநாராயணன் அறிவித்திருந்தார். அதிமுகவிற்கு உசுர் கொடுக்கும் விளையாட்டாக இருந்து வரும் இந்த வழக்கில், தினகரன் ஆதரவு 18சட்டமன்ற உறுப்பினர்களின் சார்பாக அணியமாகும் வழக்கறிஞர்கள் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைக்க உள்ளனர். தனது விசாரணையை அறங்கூற்றுவர் ஒரு கிழமைக்குள் முடிக்கும்பட்சத்தில், அதிலிருந்து ஒரு மாதத்திற்குள் தீர்ப்பு வெளியாகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதிமுக அரசுக்கு உறுதியாக ஏறத்தாழ நாற்பது நாள் ஆயுள் நீட்டிக்கப் படுகிறது. உசுர் கொடுக்கும் விளையாட்டு: தோல்வியாளர் மற்ற ஐந்தாறு நபர்களை துரத்தி பிடிக்க வேண்டும். பிடித்து விட்டால் பிடிக்கப் பட்டவர் தோல்வியாளர். தோல்வியாளருக்கு பிடி கொடுக்காமல் களத்தில் ஓடிக் கொண்டிருப்பவர் உட்கார்ந்து தற்காத்துக் கொள்ளலாம். திரும்ப அவர் எழுந்து ஓடுவதற்கு ஒடிக்கொண்டிருக்கிற ஒருவர் வந்து அவர் தலையை தொட்டு உசிர் கொடுக்க வேண்டும். தோல்வியாளருக்கு பிடி கொடுக்காமல் எல்லோருமே உட்கார்ந்து விட்டால் முதன் முதலாக உட்கார்ந்தவர் தோல்வியாளர் ஆவார். தப்பித் தவறி முதலில் உட்கார்ந்து விட்டால் யாராவது வந்து உசிர் கொடுக்க மாட்டார்களா என்று ஓடுகிறவர்களைப் பார்த்து கையைக் கையை உயர்த்திக் கொண்டிருப்பார். இதுதான் தமிழர் விளையாட்டான உசிர் கொடுக்கும் விளையாட்டு இதை அரசியலிலும் விளையாடிக் கொண்டிருக்கிறது எடப்பாடி, பன்னீர், மோடி, அறங்கூற்று மன்றம் அணி ; களத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது. தினகரன் தோல்வியாளராக துரத்தி துரத்தி வந்து கொண்டிருக்கிறார். எடப்பாடியும், பன்னீரும் சிக்காமல் மோடியும், அறங்கூற்று மன்றமும் உசிர் கொடுத்துக் கொண்டிருக்கிறன்றனர். உசிர் கொடுக்காமல் அவர்களும் உட்கார்ந்து விட்டால், எடப்பாடி பன்னீர் தோல்வியைத் தழுவி, மக்களை ஓடிப் பிடிக்க வேண்டியிருக்கும். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,857.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



