Show all

தமிழக வரலாற்றிலேயே முதல் முறையாக ஓங்கியிருக்கும் மக்கள் கை

நிலையற்ற அரசு;

உடையும் கட்சிகள்;

தமிழக வரலாற்றிலேயே முதல் முறையாக ஓங்கியிருக்கும் மக்கள் கை!

அரசு நிலைக்குமா?

கட்சிகள் நிலைக்குமா?

புரட்சி எங்கிருந்து வெடிக்கும் என ஏகப்பட்ட கேள்வி!     தமிழகத்தை மிகப் பெரும் அரசியல் குழப்பங்கள் நெருக்கிக் கொண்டிருக்கின்றன. தற்போதைய ஆளும் அரசின் எதிர்காலம் என்ன?

     ஆதிக்கம் செலுத்தும் கட்சிகளின் எதிர்காலம் என்ன?

என ஏகப்பட்ட கேள்விக்குறிகள் தமிழகத்தை உலுக்கிக் கொண்டிருக்கின்றன.

     நாடு விடுதலை அடைந்த காலம் முதல் தமிழகத்தில் வலிமை மிக்க தலைவர்கள், அசைக்க முடியாத தலைவர்கள் அடுத்தடுத்து வந்து கொண்டே இருந்தனர். இதனால் தமிழகத்தில் அரசியல் தேக்கநிலையோ குழப்பங்களோ நீண்டகாலம் நீடித்தது இல்லை.

     காங்கிரஸ் ஆட்சியில் காமராஜர் கோலோச்சினார்.. திராவிட பாரம்பரியத்தில் அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர் என அடுத்தடுத்த தலைவர்கள் வந்தனர். எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னரும் கூட கருணாநிதியும் திமுகவும் மீண்டும் அதிகாரத்துக்கு வந்தது.

     பின்னர் கருணாநிதி, ஜெயலலிதா என இருவருமே வலிமை மிக்கவர்களாக தொடர்ந்தனர்.

     தற்போது ஜெயலலிதா மறைந்துவிட்டார்.

     அவர் அமைத்த அரசு, நடுவண் பாஜக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பொம்மை அரசாக மாறிவிட்டது. அதேநேரத்தில் அதிமுகவில் உறுப்பினராக இருக்கிறாரா? இல்லையா? என தெரியாத சசிகலா தம்மை ஒரு ஜெயலலிதாவாக கூடுவிட்டு கூடு பாய்ந்து அக்கட்சியையே கபளீகரம் செய்துவிட்டார். அதிமுக, அரசு எதிர்காலம் அத்தோடு நிற்காமல் எந்த நேரத்திலும் முதல்வர் பதவியையும் கைப்பற்றிவிடுவார் என்ற நிலைதான் இருக்கிறது. அதிமுகவின் நிர்வாகிகள் சுயநலத்துக்காக சசிகலாவை ஆதரிக்க-

அக்கட்சி தொண்டர்களோ, அரசியல் பக்கமே எட்டிப்பார்க்காத ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை முன்னிறுத்துகிறார்கள். சசிகலாவும் தீபாவும் தலையெடுக்க காரணம் அதிமுகவில் தலைமை தாங்கும் அடுத்த கட்ட தலைவர் இல்லை என்கிற பலவீனம்தான். இதனால் ஆளும் அதிமுக அரசின் எதிர்காலமும் அதிமுகவின் வருங்காலமும் திடமானதாக இல்லை.

     திமுகவில் கலக குரல் இன்னொரு பக்கம் திமுகவின் தலைவர் கருணாநிதி முதுமையால் உடல்நலம் பாதிக்கப்பட்டு ஓய்வெடுத்து வருகிறார். அவரது அரசியல் சகாப்தம் முடித்து வைக்கப்படுகிறதோ என்கிற அளவுக்கு திமுகவில் நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன.

திமுகவில் ஏராளமான 2-ம் கட்ட தலைவர்கள் இருக்கின்றனர். அதேபோல் கருணாநிதி குடும்பத்தினரும் கட்சியில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவையே திமுகவுக்கு ஆகப் பெரும் பலவீனமாக இருக்கிறது. இப்போதே திமுகவில் அதிருப்தி குரல்கள் மையம் கொள்ளத் தொடங்கிவிட்டன. ஓரம்கட்டப்பட்ட 2-ம் கட்ட தலைவர்கள் ஓரணியில் திரள்வதற்கான வேலைகள் தொடங்கிவிட்டன.

     தமிழகத்தின் இருபெரும் கட்சிகளான திமுக, அதிமுகவின் எதிர்காலம் இருளை நோக்கி நகரத் தொடங்கியிருக்கிறது, இதனால் தமிழகத்தில் எப்படியும் காலூன்றி விடலாம், பிற மாநிலங்களில் கொல்லைப்புறத்தே நுழைந்தது போல தமிழகத்திலும் இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி ஆதாயம் அடையலாம் என கணக்குப் போட்டு இலவு காத்த கிளியாக காத்திருக்கிறது மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி.

     ஆனால் பாரதிய ஜனதாவின் கனவில் பாலைவனப் பெரும் புயலில் வெளிப்படும் மணல் சூறாவளியை போல கொட்டிவிட்டிருக்கிறது இந்திய துணைக் கண்டமே கண்டிராத மக்களின் யுகப் புரட்சி.

     தமிழகத்தின் உரிமை பிரச்சனைகளில் தேசிய கட்சிகளான காங்கிரஸும் பாஜகவும் பச்சை துரோகம் செய்து வருவதை தமிழக மக்கள் அப்பட்டமாக உணர்ந்து லட்சோபம் லட்சம் மக்கள் வீதிக்கு வந்து அறவழி போரை நடத்தி காட்டியிருக்கின்றனர்.

     அத்துடன் மதவாத சிந்தனை வேர்விடவே முடியாத திராவிடப் பாறை தமிழகம் என்பதும் யதார்த்தம். இதனால் காங்கிரஸும் பாஜகவும் சென்னை முதல் குமரி வரை குட்டிக் கரணம் போட்டுக் கொண்டே போனாலும் ஓட ஓட விரட்டுவார்கள் மக்கள் என்கிற நிலைமைதான்.

மாற்று மக்கள் சக்தியே!

     இவர்களுக்கு மாற்றாக விஜயகாந்த், வைகோ, திருமாவளவன், ஜி ராமகிருஷ்ணன், முத்தரசன் என “நாங்களும் இருக்கிறோம்” என்கிற தலைவர்கள்தான் இருக்கிறார்களே தவிர, ‘மாற்று’ என்கிற தலைமையை இவர்களிடம் தருவதற்கு தமிழகத்து மக்கள்தயாராக இல்லை. அந்த மாற்று சக்தியாக நாங்களே இருக்கிறோம் என மார்தட்டி வீதிக்கு வந்துவிட்டது மக்கள் சக்தி.

     தற்போதைய சூழ்நிலையில் ஒரு நிலையற்ற அரசு, உடையக் காத்திருக்கும் கட்சிகள் என்பது தமிழக அரசியல் களத்தின் நிலைமை.

     அதே நேரத்தில் மகத்தான மக்கள் எழுச்சியின் முதல் அத்தியாயமும் நடந்து முடிந்திருக்கிறது.

அடுத்த அத்தியாயம் எதற்காக எப்போது கிளம்பும்?!

அது சாதிக்கப் போவது என்ன என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் நிச்சயம் அந்த யுகப் புரட்சி ஓயப்போவதில்லை என்பது அனைவருக்குமே தெரியும்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.