06,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தொல்லியல் கழகம் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் சார்பில் 28ம் ஆண்டு கருத்தரங்கம் மற்றும் 'ஆவணம் 29' இதழ் வெளியீட்டு விழா திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்காலில் நேற்று நடந்தது. தொல்லியல் கண்காட்சியை, தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் திறந்து வைத்தார். சென்னை உயர் அறங்கூற்று மன்ற அறங்கூற்றுவர் என்.கிருபாகரன் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசும்போது: ஈரோட்டை அடுத்த கொடுமணல் கிராமத்தில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் கிடைத்த எழுத்துகளை அமெரிக்காவில் உள்ள பழம்பெரும் ஆய்வுக் கூடத்தில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அதில், கிறிஸ்து பிறப்புக்கு முன்பு 350-லிருந்து 375 ஆண்டுக்கு முந்தைய காலத்து எழுத்துகள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலகின் அனைத்து மொழிகளிலும் தொன்மையான மொழி தமிழ் என்று ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். நம்முடைய மண் பழமையானது என்று நம்முடைய பிள்ளைகளுக்கு எடுத்துக் கூற வேண்டும். தமிழரின் நாகரீகம் பழமையான நாகரீகமாகும். அந்த பழமையான நாகரீகத்தை கீழடியும் பறை சாற்றுவதாகக் கூறுகின்றனர். கீழடி நாகரீகத்தின் அந்தப் பழமையை வெளிப்படுத்தினால், தமிழர் தொன்மை வரலாறாகி விடும் என அஞ்சி அதனை மறைக்க முற்படுகின்ற செயலும் நடந்து கொண்டிருப்பது வேதனை அளிக்கிறது. மேலும்- பண்டைய காலத்தில் போர் தொடுத்து வந்தவர்கள் தாம் நம்முடைய வரலாற்று சின்னங்களை அழித்தார்கள் என்றால், இப்போது நம்முடைய அறியாமையால் நாமும் அழித்து வருகிறோம். நமது வசிப்பிடம் அருகே உள்ள பழமையான கல்வெட்டுகள், பொருட்களை பார்த்தால், அது குறித்து தொல்லியல் ஆய்வாளர்களுக்கு தகவல் தெரிவிப்பதோடு, விளம்பரப் படுத்தவும் வேண்டும். அப்போதுதான், நம்முடைய வரலாற்றை அழியாமல் பாதுகாக்க முடியும். நம்முடைய தொன்மை மற்றும் வரலாற்றை நம் பிள்ளைகளுக்கு எடுத்துக் கூற வேண்டும்; கூற முடியும் என்றார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,856.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



