07,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மேட்டூர் அணை நிரம்பியுள்ளதைக் காண சுற்றுவட்டார ஊர்களைச் சேர்ந்த மக்கள் அணி அணியாக ஆயிரக் கணக்கில் வந்து பார்த்துச் செல்வதால் மேட்டூர் அணை திருவிழாக்கோலம் பூண்டுள்ளது. தமிழகத்தில் மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இதனைத் தொடர்ந்து, மேட்டூர் அணைக்கு வரும் உபரி நீர் வினாடிக்கு 50 ஆயிரம் கன அடி காவிரியில் பாசனத்துக்காக திறந்துவிடப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் மேட்டூர் அணைக்கு தொடர்ந்து நீர் வந்துகொண்டே இருக்கிறது. இந்நிலையில் மேட்டூர் அணை ஐந்தாண்டுகளுக்குப் பிறகு நிரம்பியுள்ளது. இதனால், மேட்டூர் அணை கடல்போல காட்சி அளிக்கிறது. அதனால், மேட்டூர் அணை நிரம்பியுள்ளதைப் பார்க்க மேட்டூர் சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும், வெளி மாவட்டங்களிலிருந்தும் மக்கள் கூட்டம் அணி அணியாக, குடும்பம் குடும்பமாக மேட்டூர் அணையை நோக்கி வருகை தருகின்றனர். இதனால், மேட்டூர் அணை திருவிழாக்கோலம் பூண்டுள்ளது. மேட்டூர் அணையில் மக்கள் கூட்டம் ஆயிரக் கணக்கில் திரண்டதால் அணைப் பகுதியில் திண்பண்டக் கடைகள், சிறுவர்களுக்கான பொம்மைக் கடைகள், சிறு ரங்க ராட்டினங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது அணையைக் காணவரும் சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர், பொதுமக்கள் யாரும் அணையின் ஆபத்தான இடங்களில் செல்ல வேண்டாம் என எச்சரித்து வருகின்றனர். அப்போதும் சிலர் உணர்ச்சிவசப்பட்டு கரையோரம் சென்று செல்பேசியில் தம்படம் எடுத்து வருகின்றனர். கடல் போல காட்சி அளிக்கும் மேட்டூர் அணையைப் பார்க்கும் மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று ஊடகங்களிடம் தெரிவித்து வருகின்றனர். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,857.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



