Show all

தசரா விடுமுறைக்கு பின்னர் சிறைவிடுப்பில் வருகிறார் சசிகலா

சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றுள்ள சசிகலா, பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா நடுவண் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவரது கணவர் நடராஜன் சிறுநீரகம், கல்லீரல் ஆகிய உறுப்புக்கள் செயல் இழந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரது உடல்நிலை மிகவும் மோசமாக உள்ள நிலையில், அதன் காரணமாக சசிகலா சிறைவிடுப்பில் வெளிவர உள்ளதாக கடந்த கிழமை தகவல் வெளியானது. ஆனால் சிறைவிடுப்பில் வெளியே செல்வதற்கு கடுமையான விதிமுறைகள் இருப்பதால், அவர் அப்பொழுது சிறைவிடுப்பிற்கு விண்ணப்பிக்கவில்லை.

தற்பொழுது பெங்களூரு சிறைத்துறை நிர்வாகம், அறங்கூற்று மன்றம் ஆகியவற்றுக்கு தசரா விடுமுறை விடப்பட்டுள்ளது. எனவே தற்பொழுது சசிகலா சிறை விடுப்பு கேட்டு விண்ணப்பிக்க முடியாது. எனவே தசரா விடுமுறை முடிந்த பிறகு, சசிகலா அவசர சிறைவிடுப்பு கேட்க உள்ளதாக தற்பொழுது அதிமுக வட்டாரத்திலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.

கர்நாடக சிறைத்துறை விதிமுறைகளின்படி மருத்துவ காரணங்கள் உள்ளிட்ட காரணங்களுக்காக 15 நாட்கள் வரை அவசர சிறைவிடுப்பில் செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.