Show all

திமுக தொடக்கியது போராட்டம்! தமிழகத்தை பாலைவனமாக்கும் முயற்சிக்கான, நடுவண் அரசின் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக

17,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: திமுக செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: நடுவண் அரசில் பாசிச பாஜக அரசு ஆட்சி பொறுப்பேற்ற நாளில் இருந்து, தமிழகத்தை வஞ்சிக்கும் வகையில், ஹைட்ரோ கார்பன், ஸ்டெர்லைட், கெயில், நியூட்ரினோ போன்ற தமிழகத்திற்கு எதிரான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. காவிரி கழிமுக மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தும் முதல் முயற்சிலேயே காவிரி கழிமுக பகுதியை பாலைவனமாக்கிட முயற்சிக்கும் இத்திட்டத்தை தி.மு.க. தொடர்ந்து எதிர்த்து வருகிறது.

இந்நிலையில், டெல்லியில், நடுவண் பெட்ரோலிய துறை அமைச்சரும், பாஜகவை சேர்ந்தவருமான, தர்மேந்திர பிரதான் தமிழகத்தில் 3 இடங்கள் உள்பட, நாடு முழுவதும், 55 இடங்களில், ஹைட்ரோ கார்பன் எடுக்க, வேதாந்தா நிறுவனம், இந்திய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்துக்கு அனுமதி வழங்கிட திட்டமிட்டு, தமிழகத்தில், கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இந்திய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்துக்கும்; காவிரி கழிமுகப் பகுதியில், 2 இடங்களில் வேதாந்தா நிறுவனத்துக்கும் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்பந்தம் செய்து கொள்ளும் விழாவில் கையெழுத்திட்டுள்ளார்.

தமிழகத்தின் நெற்களஞ்சியமானதும், வேளாண் பெருங்குடி மக்களின் வாழ்வாதாரமான காவிரி கழிமுகப் பகுதியை பாலைவனமாக்கி தமிழக உழவர்களை வஞ்சிக்கும் நடுவண் அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து, புதன்கிழமை காலை 10 மணிக்கு, திருவாரூர் பேருந்து நிலையம் அருகில், தஞ்சை வடக்கு - தெற்கு, நாகை வடக்கு - தெற்கு, திருவாரூர் ஆகிய மாவட்டங்களின் சார்பில், தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் தலைமையில், இம்மாவட்டங்களுக்குட்பட்ட தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி செயலாளர்கள் - நிர்வாகிகள், அனைத்து அணிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொண்டு இக்கண்டன ஆர்ப்பாட்டத்தை எழுச்சியோடு நடத்திட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,929.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.