24,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்கியது. அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் எனக் கூறி தமிழில் வாழ்த்து தெரிவித்தார் ஆளுநர். இதனிடையே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக அமளியில் ஈடுபட்டது. அப்போது அமைதி காக்கும்படி ஆளுநர் தமிழில் கூறினார். பின்னர் ஆளுநர் உரையை புறக்கணித்து சட்டப்பேரவையில் இருந்து திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டம் என்பதால், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் இந்தக் கூட்டத்தொடர் தொடங்கும். அவர், இன்று காலை 10 மணிக்கு அவையில் உரையாற்றுவார். அதைத் தொடர்ந்து, ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சட்டப்பேரவைத்தலைவர் தனபால் வாசிப்பார். அதன் பிறகு, சட்டப்பேரவைத் தொடரை எவ்வளவு நாட்கள் நடத்துவது என சட்டப்பேரவைத் தலைவர் தனபால் தலைமையிலான ஆய்வுக்குழு முடிவுசெய்யும். அதைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை முதல் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெறும். அப்போது, போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம், ஆளுநர் ஆய்வு, இரா.கி.நகர் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் தாமதம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் பிரச்னைகளைக் கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரா.கி.நகர் தொகுதியில் வெற்றிபெற்றுள்ள தினகரனும் முதன்முறையாக சட்டமன்ற உறுப்பினராகச் சட்டப்பேரவை நடவடிக்கைகளில் இன்று முதல் பங்கேற்பார். அவருக்கு 148-ம் எண் இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. தி.மு.க உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தபின் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், 'ஆளும் அ.தி.மு.க அரசுக்கு 111 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு மட்டுமே உள்ளது என்று இந்தியத் தேர்தல் ஆணையமே தெளிவாக கூறியுள்ளது. இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி நீடிப்பதும் அதை ஆளுநர் உள்ளிட்ட அரசியல் சட்டஅமைப்புகள் வேடிக்கைப் பார்ப்பதும் இந்திய வரலாற்றின் விநோதமான காட்சிகள். எங்குப் பார்த்தாலும், லஞ்சம் ஊழலும் முறைகேடுகளும் கொடிகட்டி கோலோச்சுகின்றன. இந்த அநியாய அவலங்களுக்கு சிறுபான்மை அ.தி.மு.க அரசுதான் முதல் பொறுப்பு. அதை பார்த்துக்கொண்டிருக்கும் ஆளுநர் இரண்டாவது பொறுப்பு. ஆகவே, சகலமும் அலங்கோலமான இந்த நிலையில், ஆளுநர் உரையை தி.மு.க புறக்கணித்து பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்திருக்கிறது’ என்று தெரிவித்தார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,661
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



