09,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நாமக்கல்லில் நேற்று ஆளுனரின் காருக்கு கறுப்புக் கொடி காட்டியதாக திமுகவைச் சேர்ந்த 190 பேர்கள் கைது செய்யப்பட்டனர். சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி சென்னை சைதாப்பேட்டை அறங்கூற்றுமன்ற வளாகத்தில் இருந்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் கறுப்புக்கொடி ஏந்தி ஊர்வலமாக சென்றனர். ஆளுநர் மாளிகையை முற்றுகையிட சென்றபோது காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். ஆளுநருக்கு கறுப்புக்கொடி காட்டியதற்காக திமுகவினரைக் கைது செய்திருப்பது சரியல்ல. சேலம் சிறையில் அடைப்பட்டுள்ள திமுகவினரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். நேரு, ராஜாஜி, மோடி என பல தலைவர்களுக்கு கறுப்புக்கொடி காட்டிய வரலாறு திமுகவுக்கு உண்டு. நடுவண் அரசுக்கு அடிமையான இந்த அரசு, யாரையோ திருப்தி படுத்துவதற்காக திமுகவினரை கைது செய்கிறது. இப்போது எங்களையும் கைது செய்து சிறையில் அடையுங்கள். இவ்வாறு அவர் பேசினார். இதனைத் தொடர்ந்து காவல் துறையினரால் ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளார். இதை எதிர்த்து தமிழகம் முழுவதும் திமுகவினர் ஆங்காங்கே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,827.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



