கையில் வைத்திருந்த பணத்தை பறிகொடுத்த காலம் போய், கணக்கில் வைத்திருக்கும் பணத்தை பறிகொடுக்கும் காலத்தில் நாம் இயங்கிக் கொண்டிருக்கிறோம். பணத்தைக் கையாளும் முறையை முழுமையாகக் கற்றுக் கொள்ளாமல் பணத்தை புழங்கக் கூடாது. 20,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சென்னை சவுகார்பேட்டையைச் சேர்ந்த மாணவி பிரியா அகர்வால். இவர் தன் நண்பர்களுடன் வடபழனிக்கு வந்துள்ளார். அப்போது பிரியாணி சாப்பிடலாம் என நினைத்து தனது செல்பேசியில் இருந்து உபர் ஈட்ஸ் செயலி மூலம் பிரியாணி பெற அனுமதி கொடுத்துள்ளார். பிரியாணிக்கான தொகை 76 ரூபாய் மாணவி பிரியாவின் கணக்கில் இருந்து பிடித்தம் செய்யப்பட்டது. ஆனால் பணம் பிடித்தம் செய்யப்பட்ட பிறகு அனுமதி ரத்து செய்யப்பட்டதாக ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. ஆனால் இயங்கலை மூலம் செலுத்திய பணம் 76 ரூபாய் திரும்ப வரவில்லை. ஊடனடியாக, உபர் ஈட்ஸ் சேவை எண்ணுக்கு தொடர்பு கொண்டு இதுகுறித்து விளக்கம் கேட்கலாம் என அவர் உபர் ஈட்ஸ் வாடிக்கையாளர் சேவை எண்ணை கூகுளில் தேடியுள்ளார். உபர் ஈட்ஸ்சின் உண்மையான வாடிக்கையாளர் சேவை எண் என நினைத்து ஒரு தவறான எண்ணில் தொடர்பு கொண்டுள்ளார். எதிர்முனையில் பேசிய நபர் மாணவியின் வங்கி விவரங்களை வாங்கியுள்ளார். பின்னர் 76 ரூபாய் சின்ன தொகையாக இருப்பதால் இயங்கலை பரிவர்த்தனையில் திருப்பி செலுத்த முடியாது எனவே 5000 ரூபாயாக அனுப்பினால் மொத்தமாக சேர்த்து 5076 ரூபாயாக திருப்பி செலுத்தப்படும் என கூறியுள்ளார். இதனை நம்பிய மாணவி பிரியா கூகுள் பே செயலி மூலம் 5,000 ரூபாயை அந்த போலி சேவை மைய மோசடி நபர் சொல்லும் வங்கி எண்ணிற்கு அனுப்பி உள்ளார். இதன்மூலம் மாணவியின் வங்கி விவரங்களை தெரிந்து கொண்ட மோசடி நபர் பணம் வந்து சேரவில்லை என கூறிய மாணவியிடம் தற்போது உங்களுக்கு ஒரு ‘ஒருமுறை கடவுஎண்’ (ஓடிபி) வரும் அதைத் தெரிவித்தால் பணம் கணக்கில் வந்து சேரும் எனக்கூற மாணவியும் ஒருமுறை கடவுஎண்ணை தெரிவித்துள்ளார். ஆனால் தனது கணக்கில் பணம் வரவில்லை என மாணவி கூற அப்படியானால் மீண்டும் ஒருமுறை கடவுஎண்ணை கூறும்படி கேட்க, இப்படி எட்டு முறை ‘ஒருமுறை கடவுஎண்’ணை கேட்டுள்ளான். ஒவ்வொரு முறையும் 5000 வீதம் மொத்தம் 40 ஆயிரம் ரூபாயை அந்த மாணவியின் வாங்கி கணக்கில் சுருட்டிய பின் தொடர்பை துண்டித்துவிட்டான் அந்த மோசடி நபர். அதற்குப் பிறகுதான் போலியான சேவை எண்ணிற்கு அழைத்து பணத்தை இழந்து விட்டோம் என்பது அந்த மாணவிக்கு தெரியவந்தது. இதனையடுத்து வடபழனி காவல் நிலையத்தில் சம்பந்தப்பட்ட மாணவி புகார் அளிக்க காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மோசடி நபர் தொடர்பு கொண்ட செல்பேசி எண்ணை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோன்று அண்மையில், கூகுள் பே சேவை எண் எனக்கருதி, போலியான ஒரு எண்ணை தொடர்புகொண்டு சென்னையில் பணிபுரியும் ஆசிரியர் பௌவுலின் என்பவர் இதேபோல் பணத்தை இழந்தது குறிப்பிடத்தக்கது. கையில் வைத்திருந்த பணத்தை பறிகொடுத்த காலம் போய், கணக்கில் வைத்திருக்கும் பணத்தை பறிகொடுக்கும் காலத்தில் நாம் இயங்கிக் கொண்டிருக்கிறோம். பணத்தைக் கையாளும் முறையை முழுமையாகக் கற்றுக் கொள்ளாமல் பணத்தை புழங்கக் கூடாது. பணப்பரிவர்த்தனை செயலிகளை பயன்படுத்துவதற்கு முன்னர் ‘அ’ முதல் ‘ன்’ வரை பணப்பரிவர்த்தனை செயலிகளைப் பயன்படுத்தக் கற்றுக் கொள்ள வேண்டும். நாம் செலுத்திய பணம் உரிய நபருக்கு சென்று சேரவில்லையென்றால், நாம் உறுதியாக கவலைப்படத் தேவையில்லை. தொன்னூறு விழுக்காடு செயலிகளில், குறிப்பிட்ட நேரத்தில் அந்தப் பணம் நம் கணக்கில் வந்து சேர்ந்து விடும். இந்த அடிப்படை கூட தெரியாமல் அவசரப்பட்டு அலைந்து திரிந்து தான் ஒன்றுக்கு நூறாக பணத்தை இழக்கின்றனர். அடுத்து- நாம் பணத்தை வைத்திருப்பது நமது வங்கிக் கணக்கில்; நமது பிரச்சனைகளை முதலில் வங்கிக்குதாம் தெரிவிக்க வேண்டும். வங்கியில் பொறுப்பான பதில் கிடைக்காவிட்டால், காவல்துறையைத் தொடர்பு கொள்ளலாம். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,204.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.