Show all

உயர் அறங்கூற்றுமன்றம் அனுமதி! தமிழகத்தில் நிபந்தனைகளுடன் டாஸ்மாக் மதுபானக் கடைகளை நாளை திறக்கலாம்

சாதாரண மக்கள் பயன்படுத்தும் தேநீர் கடைகள் திறக்க அனுமதி இல்லை. பல குடும்பங்களை அழிக்கும் மதுக்கடைக்கு அனுமதியா? 40 நாட்கள் ஊரடங்கால் மது போதையை மறந்துள்ளவர்களை மீண்டும் குடிகாரனாக்கும் முயற்சியைத் தமிழக அரசு செய்கிறது. அதனால் டாஸ்மாக் கடைகளைத் திறக்கக் கூடாது என்று எதிர்க்கட்சிகள் தொடங்கி தன்னார்வலர்கள் இளைஞர்கள் வரை எதிர்ப்புகளைப் பதிவு செய்து வருகின்றனர்.

23,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: சென்னை கோயம்பேடு சந்தையில் பணிபுரிந்த தொழிலாளர்கள் அவரவர் சொந்த ஊர்களுக்குத் திரும்பத் தொடங்கியதால், மாவட்ட எல்லையில் அவர்களைத் தடுத்து நிறுத்தி தனிமைப்படுத்தப்பட்டு, பின்பு மருத்துவப் பரிசோதனையை மருத்துவக் குழுவினர் செய்கின்றனர். பரிசோதனை முடிவுகளில் பெரும்பாலானோருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
 
இந்த நிலையில் தான் நேற்று முதல் ஊரடங்கில் சில தளர்வுகள் நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளது. இந்தத் தளர்வை பொதுமக்கள், கொரோனா பரவிவிடக்கூடாது என்கிற அச்சத்தோடுதாம் தங்கள் தொழில் வணிக வருமானக் கடமைகளில் இறங்கியுள்ளனர். 

இந்த, கொரோனா அச்சம் நிறைந்த சூழலில் தமிழக அரசு நாளை முதல்; டாஸ்மாக் கடைகளைத் திறப்பதாக அறிவித்துள்ளது. இந்த நேரத்தில் டாஸ்மாக் கடைகளில் இருந்த மது சீசாக்களைக் கிடங்கிற்கு மாற்றிய அதிகாரிகள் மீண்டும் கடைகளில் இறக்கி உள்ளனர். 

தமிழக அரசின் இந்த அறிவிப்பு தமிழக மக்களை மேலும் கொந்தளிக்க வைத்துள்ளது. சாதாரண மக்கள் பயன்படுத்தும் தேநீர் கடைகள் திறக்க அனுமதி இல்லை. பல குடும்பங்களை அழிக்கும் மதுக்கடைக்கு அனுமதியா? 40 நாட்கள் ஊரடங்கால் மது போதையை மறந்துள்ளவர்களை மீண்டும் குடிகாரனாக்கும் முயற்சியைத் தமிழக அரசு செய்கிறது. அதனால் டாஸ்மாக் கடைகளைத் திறக்கக் கூடாது என்று எதிர்க்கட்சிகள் தொடங்கி தன்னார்வலர்கள் இளைஞர்கள் வரை எதிர்ப்புகளைப் பதிவு செய்து வருகின்றனர்.
 
இந்த நிலையில் தான் மன்னார்குடி வழக்கறிஞர் ஆனந்தராஜ் சமூக வலைத்தளங்கள் மூலம் ஒரு அழைப்புக் கொடுத்திருந்தார். அதாவது டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இளைஞர்கள் அனைவரும் தங்கள் வீடுகளிலேயே கருப்பு முகமூடி அணிந்து அரசுக்கு எதிர்ப்பைக் காட்ட வேண்டும் என்று அழைத்திருந்தார்.
 
இந்த அழைப்பை ஏற்ற ஏராளமான இளைஞர்கள் கழிமுக மாவட்டம் முழுவதும் கருப்பு முகமூடி அணிந்து நேற்று காலை முதல் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். இது குறித்து வழக்கறிஞர் ஆனந்தராஜ் கூறும் போது, ஒட்டு மொத்த மக்களும் ஒரு வேலை சோற்றுக்கே தவிக்கும் போது டாஸ்மாக் கடை தேவையா? அங்கே கூட்டம் கூடினால் கொரோனா பரவாதா? அரசுக்கு வருமானம் வேண்டும் என்பதற்காக இப்படி மக்களை மறுபடியும் குடிகாரர்களாக மாற்றலாமா? பல குடும்பங்களும் குழந்தைகளும் இப்போது நிம்மதியாக இருக்கின்றனர். அதைச் சீரழிக்கும் செயலைத் தமிழக அரசு செய்ய முன்வந்துள்ளது.
 
40 நாட்களாக எந்த வேலையும் இல்லாமல் வீட்டில் முடங்கிக் கிடக்கும் மக்களிடம் செலவுக்கே வழியில்லை. இந்த நேரத்தில் மதுக்கடையைத் திறந்தால் வீட்டில் இருக்கும் பொருட்களை எடுத்துச் சென்று அடகு வைத்து குடிப்பார்கள். குழந்தைகளின் சிறுநகை முதல் பெண்களின் தாலிகள் வரை மதுக்கடைக்குப் போகும். அதனால் தான் டாஸ்மாக் கடைகள் வேண்டாம் என்கிறோம். அதன் முதல் கட்டமாகக் கருப்பு முகமூடி அணியும் போராட்டதைத் தொடங்கியிருக்கிறோம். மீறி திறந்தால், பெண்களைத் திரட்டி சமூக இடைவெளியோடு நின்று கடைகளை முற்றுகையிட்டு போராடுவோம் என்று தெரிவித்துள்ளார்.

டாஸ்மாக் கடை திறப்பதை எதிர்த்து சென்னை உயர்அறங்கூற்றுமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது, தற்பொழுது உள்ள சூழலில் மதுக் கடைகளை திறந்தால் நோய் தொற்று பெருமளவில் பெருகுவதற்கு காரணமாக அமைந்துவிடும், மதுபானம் கட்டாயத்தேவை பொருள் அல்ல, டாஸ்மாக் கடைகள் நோய் தொற்று பரவும் கொரோனாஆட்சிமை பகுதிகளாக மாறிவிடும்.

சட்டம்-ஒழுங்கு பெருமளவில் பாதிக்கப்படும், உரிய ஆலோசனை மேற்கொள்ளப்படாமல் அண்டை மாநிலங்களில் மதுக்கடைகளை திறந்துவிட்டார்கள் என்பதை காரணம் கூறி அரசு இந்த முடிவை மேற்கொண்டுள்ளது, தொடர் மது அருந்தும் பழக்கம் உடையவர்கள் அதிலிருந்து விடுபட்டுள்ள நிலையில் மதுக்கடைகளைத் திறப்பது அவர்களை மீண்டும் மதுப்பழக்கத்திற்கு அடிமையாக்கிவிடும், மருத்துவ அடிப்படையாக தற்போது மதுக் கடைகள் திறப்பது உகந்ததல்ல என்று மருத்துவ நிபுணர்கள் கூறி வரும் நிலையில் அரசு எடுத்திருக்கும் முடிவுக்கு தடை விதிக்க வேண்டும். ஊரடங்கு தொடர்ந்திருக்கும் இன்னும் பத்து நாட்கள் வரை மதுக்கடைகளை திறக்க அறங்கூற்றுமன்றம் அனுமதிக்கக்கூடாது என்று வாதிடப்பட்டது.

அரசு தலைமை வழக்கறிஞர் அணியமாகி அண்டை மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதால் நாங்களும் திறக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மதுக்கடைகளில் பெருமளவில் கூட்டம் கூடாமல் சமூக இடைவெளிவிட்டு மதுபானங்களை வாங்குவதற்கான விரிவான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது என்று வாதிட்டார்

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட அறங்கூற்றுவர்கள், டாஸ்மார்க் மதுபானங்களை இயங்கலையில் விற்க முடியுமா? வீடுகளுக்கு நேரடியாகச் சென்று வழங்க முடியுமா? மாற்று ஏற்பாடுகள் என்ன செய்யமுடியும் ஆகியவை குறித்து பிற்பகல் 2.30 மணிக்கு பதில் தர அரசுக்கு உத்தரவிட்டனர்.

பிற்பகலில் தமிழக அரசு பதிகை செய்த பதில் மனுவில், இயங்கலையில் மதுபானங்களை விற்பனை செய்வது என்பது சாத்தியம் இல்லாதது. தற்போதைய நிலையில் உரிய தனிநபர் இடைவெளியுடன் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களைப் பாதுகாப்பாக விற்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டிருந்தது.

இதனையடுத்து மாலையில் சென்னை உயர்அறங்கூற்றுமன்றம், தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளைத் திறக்க தடை எதுவும் இல்லை- தமிழகத்தில் நிபந்தனைகளுடன் டாஸ்மாக் மதுபான கடைகளை நாளை திறக்கலாம் என்று தெரிவித்துள்ளது.

கொரோனா பரவலுக்காக, மக்கள் கட்டாயத்தேவை மற்றும் வணிக வருவாய்த் தளமான கோயம்பேடு சந்தையை நேற்றே மூடிவிட்டது அரசு. கொரோனா பரவல் ஏற்பட்டுவிடாமல் பாதுகாப்பாக, மக்கள் சீரழிவு மற்றும் அரசின் வருவாய்த் தளமான டாஸ்மாக் நாளை திறக்கப்படும் என்கிறது அதே அரசு. இவையெல்லாம் வரலாற்று அசிங்கங்களாக எப்போது பார்க்கப்படுமோ!

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.