Show all

சென்னை-சேலம் எண்வழிச்சாலை! மண்ணில் புரண்டு கதறி அழுத பெண்கள்: வலுக்கட்டாயமாக கைது செய்த காவல் துறை

05,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னை-சேலம் எண்வழி விரைவுச்சாலைக்கு நிலம் எடுக்கும் பணியை, சேலம் மாவட்ட வருவாய்த்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். நில எடுப்பு வட்டாட்சியர் வெங்கடேசன் தலைமையில் வருவாய்த்துறையினர் நேற்று, மாவட்ட எல்லையான மஞ்சவாடி முதல் குப்பனூர் வரை நில அளவீடு செய்து எல்லை கற்கள் நடும் பணிகளை மேற்கொண்டனர். நிலத்தை அளந்து, கல் நடுவதற்காக வந்த அதிகாரிகளிடம் பாதிக்கப்படும் உழவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அடிமலைபுதூரில் நிலத்தை அளவீடு செய்து எல்லைக்கல் நடுவதற்கு, வருவாய்த்துறையினர் பலத்த காவல் துறை பாதுகாப்போடு வந்தனர். அப்போது, நில அளவீட்டை முடித்து கல் நடுவதற்கு குழிதோண்டி, கல்லை எடுத்து வைக்கும் பணியில் ஈடுபட்டனர். 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நிலத்தின் உரிமையாளர் பெண் உழவர் உண்ணாமலை மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த 6 பேர், தங்கள் நிலத்தினை அளவீடு செய்து கல் நடக்கூடாது எனக்கூறினர்.

அதைப்பொருட்படுத்தாமல் கல் நட அதிகாரிகள் முயன்றனர். அப்போது உண்ணாமலை, தனது வேளாண் நிலத்தில் படுத்து உருண்டு புரண்டு கதறி அழுதார். 'என்னை கொன்று விட்டு நிலத்தை எடுத்துக்கொள்ளுங்கள்' எனக்கூறி கண்ணீர் விட்டார். உடனே பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர், உண்ணாமலை அவரது மகன் ரவிச்சந்திரன், மருமகள் சுதா மற்றும் சகுந்தலா, பிரகாஷ், நடராஜ் ஆகிய 6 பேரை வலுகட்டாயமாக கைது செய்து, வேனில் ஏற்றிச்சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

அந்த நேரத்தில் அங்கிருந்த மற்றொரு உழவர் இதழ்கள், தொலைகாட்சிகளுக்கு பேட்டி அளித்தார். மிக ஆவேசமாக நிலம் கொடுக்க முடியாது என்றும், அரசை கண்டித்தும் பேசிய அவரை, காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர். வீராணம் காவல் நிலையத்திற்;கு 7 உழவர்களையும் அழைத்துச் சென்று, இரவு வரை காவல் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவர்கள் மீது வழக்கு போடுவது பற்றி உயர் அதிகாரிகள் தெரிவித்த பின்னரே, மேல் நடவடிக்கை தொடர்பாக தெரிவிக்க இயலும் என காவல்துறையினர் கூறினர். இது உழவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நிலத்தை இழக்கும் இதர உழவர்கள், கைது மற்றும் எச்சரிக்கை நடவடிக்கையால் கடும் கொந்தளிப்பை அடைந்துள்ளனர்.

இச்சாலை அமைய உள்ள 277 கிமீ தொலைவில், பெரும்பான்மையான தூரம் திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைவதால்,  திருவண்ணாமலை மாவட்டத்தின் 96 கிராமங்கள் மட்டுமின்றி, மாவட்டம் முழுவதும் உள்ள விவசாய சங்கங்கள் ஒன்றிணைந்து போராட்டத்தை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளன. மஞ்சவாடி முதல் வலசையூர் வரை, சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு நேற்று, நில அளவீடு மற்றும் எல்லைக்கல் நடப்பட்டன. பூத்துக்குலுங்கிய கனகாம்பரம் தோட்டம், தென்னந்தோப்பு, மாந்தோப்பு, கொய்யா தோப்பு, நெல் வயல் பரப்பு என பயிர்கள் செழித்திருந்த பகுதியை அளவிட்டு, அதன் நடுவே நில எடுப்பு கற்களை நட்டபோது, அங்கிருந்த உழவர்கள் வேதனை தெரிவித்தனர். அதிலும் ஒரு வயலில் நேற்று நெல் நாற்று நடவு பணியில் பெண்கள் ஈடுபட்டிருந்தனர். திடீரென வருவாய்த்துறையினர் வந்து, அந்த வயலின் நடுப்பகுதியில் நில எடுப்பு கல்லை செங்குத்தாக நட்டு, குறியீடு போட்டுச்சென்றனர். ஒவ்வொரு தோட்டத்தின் உழவரும் கண்ணீர் விட்டு கதறியழுதனர். வேளாண்மை தவிர வேறு எந்த தொழிலும் தெரியாத தங்களை, இந்த அரசு நடுத்தெருவில் தத்தளிக்க விடுகிறது என வேதனை தெரிவித்தனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,823.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.