29,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக சென்னை உயர் அறங்கூற்றுமன்றத்தில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இவ்வழக்குகளை விசாரித்த அறங்கூற்றுவர்கள் நிலம் கையகப்படுத்த இடைக்கால தடை விதித்தனர். இரு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற விசாரணையின்போது 8 வழிச்சாலைக்காக மரங்களை வெட்டப்படுவது எந்த சூழ்நிலையில் உள்ளது என்பது குறித்த அறிக்கையை அரசு பதிகை செய்ய அறங்கூற்றுவர்கள் உத்தரவிட்டனர். மேலும், சமூக பாதிப்பு மதிப்பீட்டு ஆய்வு அறிக்கை எந்த நிலையில் உள்ளது? என்று கேள்வி எழுப்பிய அறங்கூற்றுவர்கள் எட்டு வழிச்சாலைக்கு மரங்களை வெட்ட கூடாது என்ற உத்தரவை மீறினால் மொத்த திட்டத்துக்கும் தடை விதிக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர். இந்நிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சேலம்-சென்னை எட்டு வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்துவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருப்பதாக நடுவண் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, இந்த திட்டத்திற்காக மரங்கள் வெட்டப்பட்ட விவகாரத்தில் வனத்துறை அதிகாரி அறிக்கை பதிகை செய்யும்படி அறங்கூற்றுவர்கள் உத்தரவிட்டனர். மேலும், சுற்றுச்சூழல் ஒப்புதல் பெறுவதற்கு மேற்கொண்ட நடவடிக்கை குறித்து நடுவண் அரசு அறிக்கை அளிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தனர். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,910.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



