Show all

சல்லிக்கட்டு சட்டத்துக்கு எதிரான மனுக்களைத் திரும்பப் பெறுங்கள்: விலங்குகள் நல வாரியம்

     சல்லிக்கட்டு நடத்த வகை செய்யும் தமிழக அரசின் சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுக்களை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று இந்திய விலங்குகள் நல வாரியம் அதன் உறுப்பினர்கள் சிலருக்கு உத்தரவிட்டுள்ளது.

     சல்லிக்கட்டில் காளைகள் பங்கேற்க அனுமதி வழங்கும் சட்டத் திருத்தத்தை தமிழக சட்டப்பேரவை அண்மையில் நிறைவேற்றியது. முன்னதாக, இது தொடர்பான அவசரச் சட்டத்தையும் தமிழக அரசு கொண்டு வந்தது.

     இந்நிலையில், இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக இந்திய விலங்குகள் நல வாரியத்தின் உறுப்பினர் அஞ்சலி சர்மா உள்ளிட்ட சிலர், தனிப்பட்ட முறையில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்தனர். இது தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியாயின.

     இந்நிலையில் அஞ்சலி சர்மாவுக்கு, வாரியத்தின் செயலர் ரவிக்குமார் புதன்கிழமை எழுதியுள்ள கடிதத்தில், “தமிழகத்தில் சல்லிக்கட்டு அவசரச் சட்டம் தொடர்பான விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டத் திருத்தத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வாரியத்தின் உறுப்பினர்கள் சிலர் மனுக்கள் தாக்கல் செய்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன. அத்தகைய மனுக்களை உறுப்பினர்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தால் உடனடியாக அவற்றைத் திரும்பப் பெற வேண்டும்.

சல்லிக்கட்டு தொடர்புடைய நீதிமன்ற வழக்குகளில் வாரியம் சார்பில் எந்தவொரு மனுவையும் தாக்கல் செய்யும் முன்பாக முறைப்படி வாரியத்தின் ஒப்புதலை உறுப்பினர்கள் பெறுவது அவசியம்”

என்று குறிப்பிட்டுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.