Show all

தமிழகத்தில் இனி பாஜக அலைதான்! தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கும் பாஜகவினர் பட்டியல் வெளியாகி விட்டது.

திமுக, அதிமுக பாணியில் பாஜகவும் தமிழகத்தில் கட்சியை வளர்க்கப் போகிறதாம். அதன் பொருட்டு, தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கும் பாஜகவினர் பட்டியலை வெளியிட்டார் தமிழிசை சௌந்தரராஜன் நேற்று.

10,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழகத்தின் முதல் அரசியல் கட்சி திமுக. கடந்த தலைமுறையில் தமிழகத்தில் திமுக வளர்ந்த வரலாறு பெருசுகள் பலரின் மலரும் நினைவுகளாக இருக்கும். திமுக போராட்டம் என்றால் உணர்ச்சி கொந்தளிக்கும், ஒட்டு மொத்த தமிழகமும் ஆடிப்போகும். திமுக கொள்கைப் பாடல்களைக் கேட்டால், நரம்பு முறுக்கேறும், தோள்கள் தினவெடுக்கும். நாகூர் அனிபாவின் உரத்தகுரல் பாடல்கள் மிகவும் பிரசித்;தம். 

திமுகவின் பயிற்சி பட்டறையில் வடிக்கப் பட்ட எம்ஜியார் தொடங்கிய அதிமுகவும் அதே பாணியில்தான் வளர்த்தெடுக்கப் பட்டது. திமுகவில் தலைமைக் கழகப் பேச்சாளர்கள் என்று ஒரு பட்டியலை வெளியிடுவார்கள். வெற்றிகொண்டான்! தமிழகத்தின் பட்டிதொட்டியெல்லாம் வெற்றிகொண்டான் மேடைப்பேச்சை கொண்டாடி மகிழ அலைஅலையாகத் திரள்வார்கள்.

அதிமுகவிற்கும் தலைமைக் கழக பேச்சாளர்கள் பட்டியல் உண்டு. அதிமுக பேச்சாளர்கள் இன்னும் ஒருபடி மேலே சென்று பலகுரல் மன்னர்களாக இருப்பார்கள். மேடைப் பேச்சு கலைநிகழ்ச்சி என்று நடத்துவார்கள். நிறைய கதை சொல்லி நாட்டில் உள்ள அவலத்தை வெளிப்படுத்துவார்கள். எம்ஜியார் குரலில் நடோடி மன்னன் படத்தின் நாடோடி, அரசராக படியேறும் போது பேசும் வசனத்தைப் பேசுவார்கள். அரங்கேமே சிரிப்பலையால் அதிரும். 

இப்போது மேடைப் பேச்சு கலைநிகழ்ச்சிகளுக்கெல்லாம் மக்கள் அன்று போல் அலைஅலையாய் கூட மாட்டார்கள். அந்த வேலையை தற்போது தொலைக்காட்சிகள் முன்னெடுக்கின்றன. 

தமிழகத்தில் தாமரையை மலரச்செய்து தீருவது என்ற கங்கணம் கட்டிக் கொண்டுள்ள பாஜகவின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் திமுக, அதிமுக பாணியில் கட்சியை வளர்க்க விரும்பி, நேற்று தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கும் பாஜகவினர் பட்டியலை வெளியிட்டார்.

இந்தப் பட்டியலில் உள்ளவர்கள் இன்று முதல் விவாதங்களில் கலந்து கொள்ள உள்ளனர் என்றும் இவர்களுடைய கருத்துகள் மட்டுமே கட்சியின் அதிகாரப்பூர்வமான கருத்துகளாக ஏற்றுக் கொள்ளப்படும் என்றும் அவர் இந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பட்டியலில் பாஜக மாநில பொதுச்செயலாளர்கள் கே.எஸ். நரேந்திரன், வானதி சீனிவாசன், மாநில துணைத்தலைவர்கள் நைனார் நாகேந்திரன், பி.டி. அரசகுமார் உட்பட மொத்தம் 27 பேர் இடம்பெற்றுள்ளனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,257.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.