18,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அண்ணா பல்கலைக் கழக இணைப்பில் உள்ள பொறியியல்; கல்லூரிகளில், இளநிலை பொறியியல் பட்டப் படிப்பு முடிக்கும் மாணவர்கள், இளநிலை படிப்புக்கு அவர்கள் விரும்பும் சம்பளத்தில் வேலை கிடைக்காத போது முதுநிலை படிப்பில் சேருவார்கள். முதுநிலைப் படிப்பில் சேர வேண்டும் எனில், தமிழக அரசின், டான்செட் பொது நுழைவு தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும். இல்லையெனில், நடுவண் அரசின், கேட் நுழைவு தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும். இந்த ஆண்டு நுழைவு தேர்வில், தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, வெள்ளிக் கிழமையோடு அண்ணா பல்கலை சார்பில், முதுநிலை படிப்பிற்கான கலந்தாய்வு முடிவுற்றது. அண்ணா பல்கலையின், நான்கு வளாக கல்லூரிகள், ஐந்து உறுப்பு கல்லூரிகள், ஆறு அரசு கல்லூரிகள், ஒரு நடுவண் அரசு கல்லூரி உட்பட, மொத்தம், 332 கல்லூரிகளில், 16 ஆயிரத்து, 728 இடங்களுக்கு கலந்தாய்வு நடந்தது. இதற்கு, 6,736 பேர் விண்ணப்பித்தனர். அவர்களில், 3,891 பேர் மட்டுமே, முதுநிலை படிப்புகளை தேர்வு செய்தனர்;. 12 ஆயிரத்து, 837 இடங்கள் மாணவர்கள் சேராமல், காலியாக உள்ளன. அதாவது, 23 விழுக்காடு இடங்களே நிரம்பின. 77 விழுக்காடு இடங்கள் நிரம்பவில்லை. அழகப்பா செட்டியார் தொழில்நுட்ப கல்லூரியில், 93; கிண்டி பொறியியல் கல்லூரி, 239; குரோம்பேட்டை, எம்.ஐ.டி., கல்லூரி, 189 மற்றும் திட்டமிடல் மற்றும் கட்டடவியல் கல்லூரி, ஓர் இடம் என, அண்ணா பல்கலை வளாக கல்லூரிகளிலேயே, 522 இடங்கள் காலியாக உள்ளன. சிப்பெட் எனப்படும், நடுவண் நெகிழி தொழில்நுட்ப கல்லூரியில், 11 இடங்கள் காலியாக உள்ளன. தனியார் கல்லூரிகளைப் பொறுத்தவரை, பல கல்லூரிகளில், ஒரு மாணவர் கூட சேராத நிலை உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர். அப்புறம் எதுக்கு மாநில அரசு, நடுவண் அரசு இரண்டும் போட்டி போட்டுக் கொண்டு தனியாக நுழைவுத்தேர்வு நடத்தி பெற்றோர்களின் காசைப் பிடுங்க வேண்டும். தொழில், வணிக நிறுவனங்கள், வங்கிகளைத் தொடங்காமல் பொறியியல் கல்லூரிகளைத் திறந்து வைத்துக் கொண்டு ஏன் காற்று வாங்க வேண்டும். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,899.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



