இறுதி ஊர்வலத்தில் மு.க.ஸ்டாலின், திருமாவளவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அனிதாவின் இறுதிச்சடங்குகளை ஒட்டி, குழுமூரில் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நடுவண் அரசு, தமிழக கல்வி உரமைக்கு எதிராக திணித்த நீட் தேர்வால், மருத்துவர் ஆகும் கனவு சிதைந்துபோக, துக்கம் தாளாமல் உயிரை மாய்த்துக்கொண்டார் அரியலூர் மாவட்டம் குழுமூரை சேர்ந்த ஏழை மாணவி அனிதா. அரசியல் கட்சிகளின் தலைவர்களும், பல்வேறு அமைப்பினரும் நேற்று குழுமூர் சென்று, அனிதாவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். மோடி அரசு தொடர்ந்து தமிழகத்தை வஞ்சித்து வருவதாகவும், ஆட்சியாளர்கள் மக்களுக்கு எதிராக செயல்படுவதாகவும், அப்போது அவர்கள் குற்றம்சாட்டினர். அனிதாவின் உடலுக்கு அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், நேரில் அஞ்சலி செலுத்தினர். திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினும் நேற்றிரவு குழுமூர் சென்று, அனிதா உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். திமுக சார்பில் 10 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என, ஸ்டாலின் தெரிவித்தார். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர் அமீர் உள்ளிட்டோரும் அனிதாவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து, நேற்றிரவு அனிதாவின் உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் மு.க.ஸ்டாலின், திருமாவளவன் ஆகியோர் கலந்து கொண்டனர். தேமுதிக தலைவர் விஜயகாந்த் மயானத்திற்கு சென்று, அனிதா உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டு, அனிதாவிற்கு பிரியா விடை கொடுத்தனர். இறுதி ஊர்வலத்தை ஒட்டி, குழுமூரில் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



