Show all

பயணிகள் 130பேர் பாதுகாப்பு! திருச்சியிலிருந்து துபாய் புறப்பட்ட, ஏர்இந்தியா விமானம், நிலையச் சுற்றுச்சுவரில் மோதி, சேதம்

26,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: திருச்சியில் இருந்து இன்று அதிகாலையில் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று 130 பயணிகளுடன் துபாய்க்கு புறப்பட்டது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, தனது கட்டுப்பாட்டை இழந்து விமான நிலையத்தில் இருந்த போக்குவரத்து கட்டுப்பாட்டுக் கோபுரம், மற்றும் சுற்றுச்சுவர் மீது மோதியது. ஆனாலும் தொடர்ந்து விமானம் செலுத்தப்பட்டு மும்பைக்கு சென்று தரையிறக்கப் பட்டது.

நான்கு மணி நேரத்திற்கு பின் மும்பையில் விமானம், அவசரமாக தரையிறக்கப் பட்டாலும் 130 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். விமானியின் சாதுர்யத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விமானத்தில் ஏற்பட்ட கோளாறு குறித்து விரிவான விசாரணைக்கு அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனர். 

இது தொடர்பாக ஏர் இந்தியா வெளியிட்ட அறிக்கையில்: விபத்து தொடர்பாக விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. இது முடியும் வரை விமானி மற்றும் துணை விமானி தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து, துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. பயணிகள் அனைவரும் மும்பையில் பத்திரமாக தரையிறக்கப்பட்டனர். அவர்களுக்கு, அங்கிருந்து துபாய் செல்ல மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது. 

இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டு உள்ளதாகவும், அதற்காக அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு உள்ளதாகவும் நடுவண் அமைச்சர் சுரேஷ் பிரபு கூறியுள்ளார்.

சுற்றுச்சுவர் மீது விமானம் மோதிய இடத்தை, திருச்சி விமான நிலைய இயக்குநர் குணசேகரன், திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் குமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.

பின்னர் இருவரும் நிருபர்களிடம் கூறுகையில், திருச்சியில் விபத்து அதிகாலை 1.19 மணிக்கு நடந்தது. பயணிகள் பாதுகாப்பு கருதி, விமானம் மும்பையில் தரையிறக்கப்பட்டது. அவர்கள் மாற்று விமானம் மூலம் துபாய் அனுப்பி வைக்கப்படுவார்கள். சம்பவம் நடந்த பின், உடனடியாக விமானிக்கு தகவல் அளிக்கப்பட்டது. இயக்குவதில் பிரச்னை ஏதும் இல்லை என தெரிவித்தார். 
இந்தச் சம்பவத்தால், மற்ற விமான சேவைகளுக்கு பாதிப்பு இல்லை. திருச்சியில் நடந்த சம்பவம் குறித்து, துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அந்த அமைப்பு அதிகாரிகளின் விசாரணைக்கு பிறகே யார் மீது தவறு என்பது தெரிய வரும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,938.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.