Show all

ஒன்றிய பாஜக அரசின் புதிய திட்டம்! தொழிலாளர்களைக் கொத்தடிமைகள் ஆக்க, நாளொன்றுக்கு 12 மணி நேர வேலை

உழவர் பெருமக்களைக் கொத்தடிமைகளாக்க முன்னெடுத்த வேளாண் சட்டங்கள் போல, அடுத்து பாட்டாளிச் சமுதாயத்தை கொத்தடிமைகள் ஆக்கும் வகைக்கான- நாளொன்றுக்குப் பனிரெண்டு மணி நேர வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவிருக்கிறது, ஒன்றிய பாஜக அரசு 

27,தை,தமிழ்த்தொடராண்டு-5122: உழைக்கும் பாட்டாளிகளுக்கு- எட்டுமணி நேரவேலை, எட்டுமணி நேரதூக்கம், எட்டுமணி நேரஓய்வு என்பதை உலக அளவில் பெற்றுத் தந்தன- நெடிய போராட்டத்தின் விளைவாக பொதுவுடைமை பேரியக்கங்கள். 

அந்த அடிப்படையாகவே மே ஒன்று என்கிற ஆண்டுக்கு ஒரு நாளை தொழிலாளர் நாளாக உலகம் கொண்டாடி வருகிறது. இதிலிருந்து வலதுசாரி முதலாளித்துவ நாடுகளும் கூட விலகிப் போக முடியவில்லை.

ஆனால் ஒன்றிய பாஜக அரசு அதிலிருந்து விலகி வெளியே வந்து பாட்டாளி சமுதாயத்தை கொத்தடிமைகள் ஆக்கும் வகைக்கான- நாளொன்றுக்குப் பனிரெண்டு மணி நேர வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவிருக்கிறது.

ஒன்றிய அமைச்சகம் தொழிலாளர் வேலை நாட்கள் தொடர்பாக வரும் நாட்களில், புதிய நெறிமுறைகள் நடைமுறைப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. ஒன்றிய அரசின் இந்தப் புதிய நெறிமுறைகள் நடைமுறைக்கு வந்தால், என்ன மாற்றம் முன்னெடுக்கப்படும் தெரியுமா? 
இப்போது அனைத்து நிறுவனங்களிலும் அன்றாடம் 8 மணிநேரம், கிழமையில் 6 நாட்கள் என்ற வகையில் வேலை நேரம் உள்ளது. இதன் காரணமாக அவர்கள் கிழமையில் 48 மணிநேரம் வேலை செய்கிறார்கள். தற்போது ஒரு கிழமையில் 1 நாள் விடுப்பு உள்ளது. ஆனால் புதிய விதியின் கீழ், அன்றாடம் 12 மணிநேரம், கிழமையில் 4 நாட்கள் மட்டுமே வேலை இருக்கும். என்று சொல்லப்படுகிறது.

அதாவது, ஒரு ஊழியர் ஒரு நாளைக்கு 12 மணிநேரமும், கிழமையில் நான்கு நாட்களில் 48 மணி நேரமும் பணிபுரிந்தால், மீதமுள்ள மூன்று நாட்களுக்கு அவர் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம். 

ஊழியர் கிழமைக்கு 5 நாட்கள் அல்லது 6 நாட்கள் வேலை செய்யத் தேவையில்லை என்பதற்கு நிறுவனத்திற்கும் ஊழியர்களுக்கும் இடையில் உடன்பாடு ஏற்பட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

எனினும் நாங்கள் ஊழியர்களையோ அல்லது முதலாளிகளையோ கட்டாயப்படுத்தவில்லை. ஆனால் இது ஒரு நெகிழ்வுத் தன்மையை அளிக்கும். இது மாறிவரும் கலாசாரத்துக்கு ஏற்ப இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அதோடு இந்த விதிமுறைகள் தொழிலாளர் சட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. 

மேலும் இந்தப் புதிய விதிகள் நடைமுறைப்படுத்தபட்டவுடன் முதலாளிகள், தங்கள் ஊழியர்களின் ஏற்பாட்டை ஒப்புக் கொண்டால், கிழமைக்கு நான்கு அல்லது ஐந்து நாள் வேலை திட்டத்திற்கு மாற அரசின் அனுமதி தேவையில்லை.

கிழமையில் நான்கு நாட்களை ஊழியர்கள் தேர்வு செய்தால், அடுத்த கிழமை இடைவெளி மூன்று நாட்கள் இருக்க வேண்டும். இதே ஐந்து நாள் என்றால், இரண்டு நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும் என்பதையும் முதலாளிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த விதிகள் நடைமுறைக்கு வந்தவுடன் நிறுவனத்திற்கு 8 மணி நேரம் அல்லது 12 மணி நேரம் என்பதை தேர்வு செய்வதற்கான சுதந்திரம் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

இந்த புதிய விதியால், பல ஊழியர்களுக்கு ஓய்வு நேரம் கூடுதலாக கிடைக்கும் என்பதாகவும், வேலை அழுத்தத்தில் இருந்து மீள்வதற்கும் வாய்ப்புள்ளதாகவம் இதில் சொல்லப்படுகிறது.  

ஆனால் உண்மையில்ல. இது தொழிலாளர்களைக் கொத்தடிமைகளாக்கும் முறையாகும். ஒரு நாளில் பனிரெண்டு மணி நேர வேலை, வேலைக்கு போகவும் வரவும் ஆயத்தமாகவே பெரு நகரங்களில் நான்கு மணிநேரம் போதுமானதாக இருப்பதில்லை. ஆக பனிரெண்டும் நான்கும் பதினாறு மணி நேரம் போக, ஒரு நாளில் மீதமிருப்பது எட்டு மணி நேரமே. அது தூக்கத்திற்கு தேவையான நேரமாகும். இது தொழிலாளர்களுக்கு வேலை அழுத்தத்தை அதிகமாக்கி மீதமுள்ள மூன்று நாட்கள் அமைதி தேடி குடிப்பழக்கத்திற்கு அவர்களை ஆளாக்கிவிடும். 

இந்தியாவில் பெரும்பான்மையாக இருக்கிற அமைப்பு சார தொழில்களில் இந்த நடைமுறைதான் இருந்து கொண்டு இருக்கிறது. அவர்கள் நாளொன்றுக்கு பனிரெண்டு மணி நேரம் என்று ஆறுநாட்களும் வேலையில் ஈடுபட வேண்டும். விடுப்பு எடுக்கும் நாட்களுக்கு சம்பளம் கிடையாது. சில நிறுவனங்களில் ஞாயிற்றுக் கிழமை கூட விடுமுறை கிடையாது. விடுப்பு எடுத்தால் சம்பளமும் கிடையாது என்கிற நிலை இருக்கிறது.

இப்போது, இந்தியாவில் அறுபது விழுக்காட்டுக்கும் மேலான மக்களுக்கு வேலை தருகிற அமைப்பு சாரா நிறுவனங்களில் பாஜக புதியதாக கொண்டு வருவதாக சொல்லுகிற திட்டம்தான் நடைமுறையில் இருக்கிறது. இந்த நிறுவனங்களில் பெரும்பாலும் கிழமைச் சம்பளங்களே. சனிக்கிழமை மாலை சம்பளம் வாங்கியவுடன் அந்தக் கிழமை உழைத்த களைப்பை ஆற்றிக் கொள்ள நேராக மதுக்கடைக்குத்தான் செல்வார்கள். அடுத்து இரண்டுநாள் விடுப்பு எடுத்துக் கொள்வது அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சுதந்திரம். ஆனால் குடும்பத்திற்கு சம்பள இழப்பு. இதில் கட்டுமானத் துறை போன்ற இடங்களில் சித்தாள்களாக பணியாற்றும் பெண்கள் கூட குடிப்பழக்கத்திற்கு ஆளாகி விடுகின்றார்கள். இந்த வருமானத்தை அரசுக்கு பெருக்கத்தான் ஒன்றிய பாஜக விரும்பும் இந்தத் திட்டம் பயன்படும். 

மேலும் நிறுவனங்கள் இந்த நடவடிக்கையின் மூலம் குறைந்த அலுவலக வாடகை மற்றும் அதிக ஆற்றல், உற்பத்தி என பல வகையிலும் ஊழியர்களிடமிருந்து பயனடையலாம் என்று புரிந்து கொள்ள முடிகிற நிலையில் இது முதலாளிகளுக்குப் பயன்படும் திட்டம் என்பது உறுதியாகிறது.

பொதுவுடைமைக் கட்சி தோழர்கள் விழிப்பாக இருந்து இந்தத் திட்டத்தை முறியடித்தாக வேண்டும். வேளாண் சட்டங்களுக்கு எதிராக களத்தில் இருக்கும் உழவர்பெருமக்களைக் கண்டுகொள்ளாமல் இருக்கிற மற்ற மற்ற துறையினருக்கும் ஒன்றிய பாஜக அரசு ஆப்புகளைத் தயாரித்துக் கொண்டிருக்கிறது. அவைகள் ஒவ்வொன்றாக அரங்கேறக் காத்திருக்கின்ற நிலையில், அடுத்த இந்த ஆப்பு தொழிலாளர்களுக்கானதாகும். 

தொழிலாளர்களின் வேலை நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக நீட்டிக்கிற திட்டம் கடந்த ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் நடைமுறைப்படுத்த முயன்ற திட்டமாகும். 

உத்தரப்பிரதேச அரசின் உத்தரவு தொடர்பாக அலகாபாத் உயர்அறங்கூற்றுமன்றம் விளக்கம் கேட்டு கவனஅறிக்கை அனுப்பிய நிலையில், உத்தரப்பிரதேச அரசு அந்தத் திட்டத்தை அப்போது திரும்ப பெற்றுள்ளது.

தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரம் அதிகரித்ததை எதிர்த்து உத்தரப்பிரதேச தொழிலாளர்கள் முன்னணி சார்பில் அலகாபாத் உயர்அறங்கூற்றுமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த தலைமை அறங்கூற்றுவர் கோவிந்த் மாத்தூர் மற்றும் சித்தார்த் வர்மா அடங்கிய அமர்வு, மாநில அரசு விளக்கமளிக்குமாறு கவனஅறிக்கை அனுப்ப உத்தரவிட, தொழிற்சாலைகளில் வேலை நேரத்தை அதிகரிப்பதற்கான உத்தரவு  தனி ஆணை மூலம் திரும்பப் பெறப்படுவதாக உத்தரப்பிரதேச அரசு தெரிவித்திருந்தது என்பது இந்த நேரத்தில் குறிப்பிடத்தக்கது ஆகும்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.