Show all

பத்தாம் வகுப்புக்கு தேர்வு அறிவித்து தேர்வு அட்டவணை வெளியீடு!

திங்கட்கிழமை 19,வைகாசி (01.06.2020) தொடங்கி 30,வைகாசி (12.06.2020) வரை பத்தாம் வகுப்பு தேர்வு நடத்தப்படும் என்று தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

29,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: திங்கட்கிழமை 19,வைகாசி (01.06.2020) தொடங்கி 30,வைகாசி (12.06.2020) வரை பத்தாம் வகுப்பு தேர்வு நடத்தப்படும் என்று தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பைத் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் மார்ச் மாதம் முதல் ஏப்ரல் முதல் வாரத்திற்குள் 12 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படுவது வழக்கம். ஆனால் கொரோனா பாதிப்பால் பள்ளிகள், கல்லூரிகள் கடந்த 11,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121 (24.03.2020) முதல் மூடப்பட்டுவிட்டன. 

எனினும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஓரிரு தேர்வுகள் மட்டுமே பாக்கியிருந்ததால் அவை நடத்தி முடிக்கப்பட்டன. 10ஆம் வகுப்புகளுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அவை ஒத்தி வைக்கப்பட்டன. கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் 10ஆம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்படும் என பரவலாக பேசப்பட்டது. ஆனால் அரசோ அனைத்திற்கும் 10ஆம் வகுப்பு தேர்வு அடித்தளம் என்பதால் கட்டாயம் தேர்வு நடத்தப்படும் என்றது. 

இந்த நிலையில் தற்போது  10ஆம் வகுப்பு தேர்வு அறிவிப்பை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டுள்ளார். 
10ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை:- 
ஜூன் 1- மொழிப்பாடம் 
ஜூன் 3- ஆங்கிலம் 
ஜூன் 5- கணிதம் 
ஜூன் 6- விருப்பப் பாடம் 
ஜூன் 8- அறிவியல் 
ஜூன் 10- சமூக அறிவியல் 
ஜூன் 12- தொழிற்கல்வி (வொகேஷனல்)

இந்த அட்டவணையைப் பார்க்கும் போது பத்தாம் வகுப்புக்கு தமிழ்;த் தேர்வே இல்லையா என்ற கேள்வி எழும். ஆம் தமிழ் படிக்காமலே தமிழகத்தில் மாணவர்கள் பத்தாம் வகுப்பை முடிக்க முடியும். 

முதல் தேர்வான மொழிப்பாடத்தில் தமிழை விருப்ப மொழியாகத் தேர்ந்தெடுத்தவர்களுக்கு மட்டுமே அன்று தமிழ்த் தேர்வு. 
பகுதி - 1 மொழிப்பாடங்கள் (தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், உருது, இந்தி, அரபி, பிரன்ச் மற்றும் ஜெர்மன்
பகுதி - 2 ஆங்கிலம்
இதுதாம் தொடர்ந்து இருந்து வரும் தமிழகத்தின் பள்ளிக் கல்வித்திட்டமாகும். காங்கிரசார் ஆட்சிகாலத்தில் முன்னெடுக்கப்பட்ட கல்வித்திட்டத்தில் தமிழ் பத்தோடு ஒரு மொழியாக அங்கீகரிக்கப்பட்டது போலவேதாம் வாய் கிழியப் பேசும் இரண்டு கழகங்களின் ஆட்சியிலும் தொடர்ந்து வருகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.