16,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இரவில் வாகனங்களை ஓட்டிச் செல்வோர் வாகனங்களை இயக்கும்போது மட்டுமல்ல, அது பழுதாகி வழியில் நின்றால்கூட என்னென்ன மாதிரி எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், அவ்வாறு எடுக்காவிட்டால் என்னென்ன பெரிய பின் விளைவுகளை சந்திக்க வேண்டும் என்பதற்கு சேலத்தில் இன்று அதிகாலை நடந்த ஏழுபேரை பலிகொண்ட விபத்து மிகப் பெரிய உதாரணம். மாமாங்கம் என்ற பகுதியில் ஓமலூர் தேசிய நெடுஞ்சாலையில் பஞ்சராகி நின்று கொண்டிருந்த சரக்கு ஆட்டோ மிக அதிக பாரத்தை ஏற்றிய நிலையில், பின்பக்க கதவை முழுமையாக அடைக்க முடியாமல் பாதியாக திறந்த நிலையிலேயே அதை கட்டி வைத்து நிறுத்தப் பட்டிருந்திருக்கிறது. இதனால் பின் பக்க கதவு இருந்த பிரதிபலிக்கும் சிவப்பு வண்ண ஸ்டிக்கர் பின்னால் வரும் வாகனங்களுக்கு தெரியவில்லை. சரி அதுதான் போகட்டும் என்றால், பஞ்சராகி சாலையில் நின்ற போது அதை உணர்த்தும் வகையில் கூம்பு வடிவ பிரதிபலிப்பானை, பின்னால் கொண்டு சென்று வைக்கவில்லை. அடையாள சிவப்பு விளக்கும் போட்டிருக்கவில்;;;;லை. ஆனால் இது ஆபத்தான நடவடிக்கை யென்று யாரும் அறிந்திருக்க வில்லை. அந்த ஆட்டோவின் ஓட்டுனரும் இது மிகத் தவறான நடவடிக்கை என்று உணர்ந்திருக்க வில்லை. இன்று அதிகாலை நிகழ்நத ஏழுபேரை பலிகொண்ட விபத்துக்கு இதுதான் காரணம் என்று பின்னர் காவல்துறையால் ஆய்வு செய்து அறிவிக்கப் பட்டிருக்கிறது. சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து நேற்று இரவு 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரவிந்த் என்ற தனியார் பேருந்து தருமபுரி நோக்கி சென்றது. இந்தப் பேருந்து அந்த அபயகர ஆட்டோவின் மீது மோதியது. மோதிய வேகத்தில் ஓட்டுநர் தனது கட்டுப்பாட்டை இழந்தார். இதையடுத்து அந்தப் பேருந்து சாலை தடுப்பைத் தாண்டி எதிர்ப்புறமாக சென்றது. எதிர்ப்புறம் பெங்களூரில் இருந்து கேரளா நோக்கி சென்று கொண்டிருந்த யாத்திரா டிராவல்ஸ் நிறுவனத்தின் தனியார் ஆம்னி பேருந்து மீது மோதியது. இதனால் யாத்திரா ஆம்னி பேருந்து பக்கவாட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 பெண்கள் உட்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். இரு பேருந்துகளிலும் பயணித்த 38 பயணிகள் படுகாயமடைந்தனர். அவர்களுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை வழங்கப்படுகிறது. சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி, சேலம் நகர காவல் துறை ஆணையர் சங்கர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பரிசீலனை நடத்தினர். அவர்கள் நடத்திய ஆய்வில்தான் மேற்கண்ட விபத்திற்கான அடிப்படை துப்பு துலக்கப் பட்டது. இரவு நேரப் பயணத்தில் ஈடுபடுவோர் கவனக் குறைவால், தங்களும், தங்கள் கவனக் குறைவால் மற்றவர்களும் பாதிக்கப் படுகிறார்கள் என்பதை உணர்ந்து செயல் படவேண்டும். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,897.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



