Show all

முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி

இந்திய அணி இலங்கையில் சுற்றுலா மேற்கொண்டு 3 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 2 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்ற நிலையில் நேற்று நடைபெற்ற முதல் ஒரு நாள் போட்டியிலும் இந்திய அணி  9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

தம்புல்லா நகரில் நடைபெற்ற இப்போட்டியில் டாசில் வென்ற இந்திய அணி இலங்கையை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. அதன்படி முதலில் ஆடிய இலங்கை அணி 43.2 ஓவர்களில் 216 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி சார்பில் அக்சர் பட்டேல் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளையும், பும்ரா, சகல், கேதார் ஜாதவ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 

அடுத்து 217 ரன்கள் எடுத்தால் வெற்றி என்னும் எளிதான இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான ரோகித் சர்மா 4 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். எனினும் தவானும் விராட் கோலியும் இணைந்து அதிரடியாக ஆடி 29 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு, 220 ரன்கள் எடுத்து இந்திய அணியை வெற்றி பெற செய்தனர்.

தவான்  90 பந்துகளில் 20 பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்சர்களுடன் 132 ரன்களும், விராட் கோலி 70 பந்துகளில் 10 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சருடன் 82 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். ஷிகர் தவான் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.