Show all

இந்தியக் கட்டுப்பாட்டு வங்கி தெரிவித்துள்ள 3தவணை சலுகை ஆதாயமற்றதா! ஆயிரத்தில் சலுகை பெற்று இலட்சத்தில் செலுத்த வேண்டுமா


இந்தியக் கட்டுப்பாட்டு வங்கி தெரிவித்துள்ள 3தவணைக்கடன் சலுகை ஆதாயமற்றது என்றும், அந்த சலுகைத் தொகை புதிய கடனாக்கப்பட்டு வட்டியோடு திரும்பப் செலுத்த வேண்டியுள்ளதால்- ஆயிரத்தில் சலுகை பெற்று இலட்சத்தில் திருப்ப வேண்டும் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.

20,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: அறியாத நபர் நமக்கு செய்வதாகத் தெரிவிக்கிற எந்த ஆதாயமும் வணிகம் சார்ந்ததே என்பது நடப்பில் புழக்கத்தில் உள்ள ஒரு சொலவடையாகும்.

நமக்கான பேரிடர் காலத்தில், நம்மோடு இருக்கிற மாநிலஅரசு, சிலபல உறவுச் சிக்கல் இருந்தாலும் குடும்ப உறவாக நமக்கு ஆறுதலாக அமைவதை வேளாண் கடன்கள், நீட்தேர்வு, காவிரிச் சிக்கல், வர்தா புயல் போன்ற பல அனுபவங்களில் நாம் உணர்ந்திருக்கிறோம். 

ஆனால் நமக்கு மொழியாலும் பண்பாட்டாலும் அயலாகவே அமைந்து விட்ட நடுவண் அரசு- காங்கிரஸ் காலத்தில் நமக்கு செய்த உதவிகள் யானைப் பசிக்கு சோளப்பொறியாக உதவியிருக்கிறது. ஆனால் பாஜக ஆட்சியில் முற்றிலும் அயலாக கொடுங்கோன்மையாக, பாதிப்புகளை மட்டுமே பணமதிப்பிழப்பு, சரக்கு சேவைவரி, நீட், ஹைட்ரோ கார்பன் என்பதாகச் சந்தித்து வருகிறோம். 

உண்மையில் பிரித்தானிய ஆட்சி காலத்தில் கூட அயலர் ஆளுமையை மாநில ஆட்சி போல உணர முடிந்ததாக தெரிவிக்கின்றார்கள் நமது பெருசுகள். பிரித்தானிய இந்தியாவில், இரட்டை ஆட்சி முறையில் காங்கிரஸ் இராஜகோபாலாச்சாரி தமிழகத்தின் மீது ஹிந்தியை திணித்ததாகவும், காங்கிரஸ் கட்சி பதவி விலகிய பிறகு நேரடி பிரித்தானிய அட்சியில், ஹிந்தித் திணிப்பு விலக்கிக் கொள்ளப்படடதாகவும் வரலாற்றைச் சுட்டிக் காட்டி அப்படியா என்று வியப்பை ஏற்படுத்துகிறார்கள்.

இந்த கொரோனா பாதிப்பில், மாநில அரசு நமக்கு தோளோடு தோள் நின்று பலவகையாலும் உதவி வருகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக 1000 ரூபாய் பணமாக எந்த வித நிபந்தனைக்கும் நம்மை உட்படுத்தாமல் கொடுக்கத் தொடங்கிவிட்டது. நடுவண் அரசு அறுத்த கைக்கு இன்னும் சுண்ணாம்பு கூட தரமுயலாத நிலையில் கடனுக்கு 3மாத தவணையில் சலுகை என்று, அதுவும் கட்டுப்பாட்டு வங்கியை வைத்து அறிவிப்பு கொடுத்திருக்கிறது. உத்தரவாக அல்ல அனுமதியாக. 

இந்த நிலையில்தான்- இந்தியக் கட்டுப்பாட்டு வங்கி தெரிவித்துள்ள 3தவணைக்கடன் சலுகை ஆதாயமற்றது என்றும், அந்த சலுகைத் தொகை புதிய கடனாக்கப்பட்டு வட்டியோடு திரும்பப் செலுத்த வேண்டியுள்ளதால்- ஆயிரத்தில் சலுகை பெற்று இலட்சத்தில் திருப்ப வேண்டும் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.

மொழியாலும், பண்பாட்டாலும் அயலானவர்கள் அமைந்திருக்கிற நடுவண் அரசு இந்தப் கொரோனா பேரிடர் காலத்திலும், அறியாத நபர் நமக்கு செய்வதாகத் தெரிவிக்கிற எந்த ஆதாயமும் வணிகம் சார்ந்ததே என்கிற சொலவடையை உறுதிப்படுத்துவதாகவே அமைகிறது.

ஏதோ ஒரு மாநிலத்தின் மொழி, பண்பாட்டிற்காக இயங்குகிற மாநிலக்கட்சிகளான காங்கிரஸ், பாஜக தங்களை ஒட்டு மொத்த நாட்டிற்குமானவர்கள் என்று போலியாக நடிக்கும் போது எதிர்காலத்தில் தமிழர்கள் இதே போல நம்பி ஏமாந்து கொண்டிருக்கக் கூடாது என்பதை இந்த பேரிடர் காலத்தில் கொரோனா நமக்கு தந்த பாடமாக நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும். தேசிய கட்சிகளாக எந்தக் கட்சியும் தேவையில்லை. மாநிலக் கட்சிகளின் கூட்டாட்சியாகவே இருக்க வேண்டும்  நடுவண் அரசு, என்ற பாடத்தை நாம் அரசியல்வாதிகளுக்கு போலி தேசியவாதிகளுக்கு பாடமாக உணர்த்தியாக வேண்டும்.

சரி தலைப்பிற்கு வருவோம். எடுத்துக்காட்டாக, ஒருவர் 8.5 விழுக்காடு வட்டிக்கு, 19 ஆண்டுகளில் (228மாதங்கள்) திருப்பிச் செலுத்த வேண்டிய கடன் 50 லட்சம் ரூபாய் பாக்கி இருக்கிறது என வைத்துக் கொள்வோம். இப்போது அவர் மாதா மாதம் 44,272 ரூபாய் தவணையாகச் செலுத்திக் கொண்டு இருப்பார். 

ஒரு வேளை இவர் 3 மாத தவணை ஒத்திவைப்பை பயன்படுத்திக் கொள்கிறார் என வைத்துக் கொள்வோம். ஆக மாதம் 35,000 மேனிக்கு 3 மாதங்களுக்கு சுமாராக 1,05,000 ரூபாய் வட்டித் தொகை அசலுடன் சேர்ந்து வட்டிக்கு குட்டி போடும். அதாவது இனி 51.05 லட்சம் ரூபாய்க்கு வட்டி கட்ட வேண்டி இருக்கும். 

1. இந்த கூடுதல் சுமையைச் சமாளிக்க, 44,272 ரூபாய் தவணையாகவே தொகையையே செலுத்துவது என்றால் தவணையை 228 மாதத்தில் இருந்து 240 மாதங்களாக அதிகரிக்க வேண்டி இருக்கும். (அல்லது) 
2. 45,202 ரூபாய் என தவணைத் தொகையை அதிகரித்து அதே 228 மாதங்களுக்கு கடன் செலுத்த வேண்டி இருக்கும். 
ஏதோ ஒருவகையில் வாங்கிய கடனுக்கு தவணை செலுத்த முடியும் என்றால் ஒழுங்காக தவணையைச் செலுத்திவிடுவது நல்லது. உறுதியாகவே கையில் காசு இல்லை, கையில் இருக்கும் காசை வைத்து தான் இந்த கொரோனா வீடடங்கை சமாளிக்க சாப்பாடு வாங்கிக் கொண்டு இருக்கிறீர்கள் என்றால் மட்டும தவணைகளை ஒத்தி வைப்பது குறித்து யோசிக்கலாம். தேவை இல்லாமல் கூடுதல் வட்டி செலுத்த வேண்டிய நிலைக்கு ஆளாகிவிடாதீர்கள் மக்களே என்கின்றனர் வங்கி சார்ந்த விவரம் தெரிந்தவர்கள்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.