Show all

விட்டத்திலே கயித்தை மாட்டிட்டு வெளிய வந்து பாத்தா சாவு வரலியேப்பா! பிள்ளைகளிடம், அச்சமூட்டும் முதியோர் உபாயம் போல..

பாஜக ஆட்சியில் அமர்ந்து- மாநில உரிமையான கல்வியைப் பிடுங்கி நீட்தேர்வு வைப்பது- மாநில வரிவாங்கும் உரிமையைப் பறித்து, சரக்கு சேவை வரி என்று தொழில் வணிகத்தை நாசம் செய்தது- எலிக்கு பயந்து கூரையைக் கொளுத்திய கதையாக, கருப்புப்பணம் கள்ள ரூபாய்தாள்களை ஒழிக்கிறேன் என்று பணமதிப்பு நீக்கம் செய்து அஞ்சறைப் பெட்டியில் இருந்த சேமிப்பையும் கரைத்தது- சேமிப்பு ஆர்வத்தையும் நம்பிக்கையையும் முடக்கியது- என, அனைத்தையும் மறைத்து விட்டு “விட்டத்திலே கயித்தை மாட்டிட்டு வெளிய வந்து பாத்தா சாவு வரலியேப்பா!” என்பதான பிள்ளைகளிடம், அச்சமூட்டும் முதியோர் உபாயத்தைக் கையில் எடுத்திருக்கிறது.

13,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: அகவை முதிர்ந்த பெரியவர்கள், வீட்டில் தன்னை கவனிக்க ஆள் இல்லை என்று உணரும் போது- செத்துப் பேயிரலாம்னா முடியலையேப்பா, விட்டத்திலே கயித்தை மாட்டிட்டு வெளிய வந்து பாத்தா சாவு வரலியேப்பா! என்று புலம்பி, வீட்டின் சிறியவர்களை இப்படி அறச்சிக்கலில் ஆழ்த்துவார்கள். தனது தாழ்வு மனப்பான்மையை பெரிது படுத்தி சோகத்தில் வீழ்வார்கள். 

இந்தியப் பொருளாதாராம்- மந்தநிலையால் இந்தியாவின் அனைத்துத் துறைகளையும் வீழ்த்திக் கொண்டிருக்கிறது. பாஜக இரண்டாவது முறையும் இந்திய ஆட்சியில் அமர்ந்து விட்டது. ஆனால்- பாஜகவுக்கு தெரிந்ததெல்லாம், தாங்கள் உயர்ந்தவர்கள், தங்கள் கட்சி உயர்ந்தது, தங்கள் மதம் உயர்ந்தது, தங்கள் மொழி உயர்ந்தது, தங்கள் தொல்கதைகள் உயர்ந்தவை, என்கிற ஆதிக்கவாதம் மட்டுமே. அடுத்தவர்கள் ஆட்சியில் பாஜக கைத்தட்டல் பெறுவது மிகவும் எளிது. ஏனென்றால் அவர்களுடைய ஆதிக்கவாதம் வெற்றுப் பேச்சாக மட்டுமே, வெற்று முழக்கங்களாக மட்டுமே இருந்து இந்தியாவை பாதிக்காது.

ஆனால் அவர்கள் ஆட்சியில் அமர்ந்து மாநில உரிமையான கல்வியைப் பிடுங்கி நீட்தேர்வு வைப்பது- மாநில வரிவாங்கும் உரிமையைப் பறித்து, சரக்கு சேவை வரி என்று தொழில் வணிகத்தை நாசம் செய்தது- எலிக்கு பயந்து கூரையைக் கொளுத்திய கதையாக, கருப்புப்பணம் கள்ள ரூபாய்தாள்;களை ஒழிக்கிறேன் என்று பணமதிப்பு நீக்கம் செய்து அஞ்சறைப் பெட்டியில் இருந்த சேமிப்பையும் கரைத்தது சேமிப்பு ஆர்வத்தையும் நம்பிக்கையையும் முடக்கியது. இந்தியாவை பாதிக்கிறது. 

இந்தியாவிற்கு வருமானமும் கடனும் இருப்பது போல, ஒவ்வொரு சிறுதொழில் அதிபருக்கும் கடனும் இருக்கும்- வருமானமும் இருக்கும். கடன் என்கிற கமுக்க நடவடிக்கையை அம்பலப் படுத்தினால் வளர்ச்சி சாத்தியம் இல்லை. எண்ணிம பணப்பரிமாற்றம் ஆதார் போன்றவைகளால் ஒவ்வொரு தனிமனிதனின் பொருளாதார நடவடிக்கைகள் கண்காணிக்கப் பட்டு வளர்ச்சியில்- வரியும் அசிங்கப் படுத்துதலும் செய்து விட்டு, தளர்ச்சியில்- அம்போ என விடப்படுகின்றனர். 

திருமணத்தில்- மணமக்கள்தாம் கதைத்தலைவர்கள் என்பது போல, தொழில் வணிகத்திலும்- அவரவர் தொழிலுக்கு அவரவர்கள் கதைத்தலைவர்களாக இருந்தால்தான் வெற்றி சாத்தியம். கண்காணிப்பதற்கான பொறுப்பில் இருக்கிற அதிகாரிகள் வளர்கிறார்கள். ஆனால் தொழில் வணிகம் வளர்வதில்லை. 

இந்த நிலையில்தான், “விட்டத்திலே கயித்தை மாட்டிட்டு வெளிய வந்து பாத்தா சாவு வரலியேப்பா!” என்பதான புலம்பல் போல “இந்தியா பொருளாதார மந்த நிலையை சரி செய்வதற்காக இந்திய அரசு மூலம் கொண்டு வரப்பட்ட சீர் திருத்த நடவடிக்கை எதுவும் பலன் அளிக்கவில்லை”  என்ற சால்சாப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்தியா சந்தித்து வரும் பொருளாதார மந்த நிலையை சரிசெய்ய- எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் தற்போது இந்திய பாஜக அரசு இருக்கிறது. 

இந்திய நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமன் பதவி ஏற்றதில் இருந்து அல்ல- அதற்கு முன்பே அருண் ஜெட்லி காலத்திலேயே நிதி நிலைமை மோசம் அடைந்து வந்து கொண்டு இருக்கிறது. தற்போது கடந்த ஒரு ஆணடாக நிதி நிலைமை மிக மோசமாக இருந்தது. 8 தொழிற்துறைகளின் வளர்ச்சி மொத்தமாக காலி. ஜிடிபி கடும் சரிவு. 

நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டிற்கான ஜிடிபி வரலாறு காணாத சரிவு ஏற்பட்டுள்ளது. இரண்டாவது காலாண்டிற்கான ஜிடிபி 4.5விழுக்காடாக ஆக சரிந்துள்ளது. கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத சரிவு ஆகும் இது. 

இந்தியாவின் இந்த பொருளாதார சீர்கேடு காரணமாக ஊர்தித்துறை, தொழிற்துறை என பல துறைகளில் பணியாற்றி வந்த பணியாளர்கள் பலர் வேலையை இழந்தனர். அன்றாடம் பல்லாயிரக்கணக்கில் பலர் வேலையை இழந்து வருகின்றனர். இதனால் தகவல்தொழில் நுட்பத் துறையும் மிக கடுமையாக பாதிக்கப்பட்டது.

இந்தப் பொருளாதார சீர்கேட்டை சரி செய்ய இந்திய பாஜக அரசு நிறைய திட்டங்களை அறிவிப்புகளை வெளியிட்டதாம். ஆனால் அனைத்தும் தாங்கள் விதித்த வரிகளின் குறைப்புகள்தாம்.  சரக்கு சேவை வரி விகிதத்தில் செய்த சீர் திருத்தம் எதுவும் உதவவில்லையாம். இன்னொரு பக்கம் அதேபோல் கார்ப்பரேட் நிறுவனங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையிலும், கார்ப்பரேட் நிறுவனங்களில் பணி நீக்கத்தை குறைக்கும் வகையிலும் கார்ப்பரேட் வரியை இந்திய பாஜக அரசு குறைத்ததாம். ஆனால் இதுவும் கார்ப்பரேட் பணி நீக்கத்தில் எந்த விதமான மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லையாம்.

இதெல்லாம் போக மூலதன ஆதாய நிறுவனங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் இந்திய அரசு மூலதன ஆதாய வரியைக் குறைத்ததாம். ஆனால் மூலதன ஆதாய உற்பத்தி இதனால் முன்னேற்றம் அடையாமல் மேலும் சுருக்கம் அடைந்துள்ளதாம். 

அதன்படி நடப்பு நிதி ஆண்டின் 2வது காலாண்டில் இந்தியாவில் 8 ஆதார உற்பத்தி தொழிற்துறைகளின் வளர்ச்சி மொத்தமாக சரிந்துள்ளது என்று இந்திய அரசு அறிவித்துள்ளது. மொத்தம் இதன் வளர்ச்சி 5.8விழுக்காடு குறைந்துள்ளது. அதேபோல் ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில், அந்த துறையிலும் வரி குறைக்கப்பட்டதாம். ஆனால் இதனால் வருவாய் மேலும் 2.75 லட்சம் கோடி ரூபாய் சரிந்து இந்திய அரசுக்கு மேலும் நட்டம் ஏற்பட்டதாம். இப்படி சீர்திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று செய்யப்பட்ட நடவடிக்கை எல்லாம் இந்தியாவின் பொருளாதாரத்தை மேலும் மோசமாக்கி உள்ளதாம்.

ஒழுக்கமாக மாநிலஅரசுகளின் நடவடிக்கைகளில் தலையிடாமல். மாநில அரசிடம் இருந்து பிடுங்கிய துறைகள் அனைத்தையும் மாநில அரசுகளிடமே வழங்கியும், அறங்கூற்றுத்துறை, இந்தியக்கட்டுப்பாட்டு வங்கி, வருமான வரித்துறை, தேர்தல் ஆணையம் ஆகிவற்றின் மீதான ஆதிக்கவாதத்தை விலக்கிக் கொண்டாலே எல்லாம் சரியாகும். ஆதாரைத் தூக்கி எறிந்துவிட்டு, மாநிலஅரசுகளின் கட்டுப்பாட்டில், உள்ள குடும்ப அட்டை வலுப்படுத்திட வேண்டும் அதற்கான அரிசியை கொள்முதல் செய்வதில் சுணக்கத்தைத் தளர்த்த வேண்டும். காஷ்மீருக்கு வழங்கப் பட்டிருந்த சிறப்பு அதிகாரத்தை திருப்பி வழங்குவதோடு இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் அந்தத்தகுதியை வழங்கிட வேண்டும். ஹிந்தி பிரச்சார சபாவை மூடி விட்டு அனைத்து மொழிவளர்ச்சிக்குமான கட்டுமானங்களை ஏற்படுத்த வேண்டும். இந்தியாவின் அனைத்து சிக்கல்களும் முடிவுக்கு வந்து- இந்தியா ஐந்தே ஆண்டுகளில் வல்லரசாகி விடும்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,351.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.