Show all

வியக்கும் அறங்கூற்றுமன்றம்! ஈசா அறக்கட்டளையின் பழைய கட்டிடத்திற்கு புதிய சட்டத்தில் விலக்கா

கோவை ஈசா அறக்கட்டளையால் கல்வி நோக்கத்திற்காக கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதால், சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டுமென்ற விதியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக, ஒன்றிய அரசு சென்னை உயர் அறங்கூற்றுமன்றத்தில் தெரிவித்துள்ளதை- பழைய கட்டிடத்திற்கு புதிய சட்டத்தில் விலக்கா என்று வியந்துள்ளது அறங்கூற்றுமன்றம்.

10,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5124: வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் கோவை ஈசா அறக்கட்டளை விதிகளை மீறி கட்டிடங்களை கட்டியதாக புகார்கள் உள்ளன. சுற்றுசுழல் அனுமதி பெறாமல் கட்டிடங்களை கட்டியது தொடர்பானவை அந்தப் புகார்கள்.

இந்த நிலையில், விதிகளை மீறி கட்டிடங்கள் கட்டியதற்காக ஏன் வழக்கு தொடரக் கூடாது என விளக்கம் கேட்டு ஈசா அறக்கட்டளைக்கு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் நாளது 04,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123 அன்று கவனஅறிக்கை அனுப்பியிருந்தது. 

இந்த முயற்சிக்கு தடை விதிக்கக் கோரி ஈசா அறக்கட்டளை சார்பில் சென்னை உயர் அறங்கூற்றுமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஈசா அறக்கட்டளை சார்பில் சி.ஆர். தினேஷ் ராஜா என்பவர் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு எதிராக வழக்கு தொடுத்தார். 

அதில், பதினாறு ஆண்டுகளுக்கு முன்பு சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பிட்டு விதிகளின் அடிப்படையில் எங்கள் நிறுவனத்தின் கல்வி நிறுவனங்களுக்கு கட்டிடம் கட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அனுமதி அளிக்கப்படவில்லை. ஆனால் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு கொண்டு வரப்பட்ட புதிய விதிகளின்படி எங்கள் கட்டிடத்திற்கு சுற்றுசுழல் அனுமதி தேவை இல்லை. அதனால் எங்கள் மீது வழக்கு தொடுக்க அனுமதிக்க கூடாது என்று ஈசா அறக்கட்டளை விளக்கம் அளித்தது. 

இந்த வழக்கை விசாரித்த உயர் அறங்கூற்றுமன்றம், ஈசா யோகா மையத்திற்கு எதிரான கவனஅறிக்கை மீது மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கக்கூடாது என எட்டு மாதங்களுக்கு முன்பு இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது. 

எட்டு ஆண்டுகளுக்கு முன்பு பிறப்பிக்கப்பட்ட விதிப்படி நாங்கள் கல்வி நிறுவனம் என்பதால் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியை பெற வேண்டியது இல்லை, என்று ஈசா தெரிவித்தது. இந்த வழக்கு பொறுப்பு தலைமை அறங்கூற்றுவர் டி.ராஜா, அறங்கூற்றுவர் டி. கிருஷ்ணகுமார் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. 

ஒன்றிய அரசு தரப்பில் இதில் வாதம் வைக்கப்பட்டது. அதில், கல்வி நோக்கத்திற்காக கட்டடங்கள், மாணவர் விடுதி கட்டப்பட்டுள்ளது. அதனால் அதில் தவறு இல்லை. சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டுமென்ற விதியிலிருந்து ஈசா அறக்கட்டளைக்கு எட்டு ஆண்டுகளுக்கு முந்தைய விதிகளின்படி விலக்கு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. 

அப்போது அறங்டகூற்றுவர்கள், சட்டம் உருவாக்கப்பட்ட ஆண்டுக்கு முந்தைய அனுமதி பெறாத பழைய கட்டிடத்திற்கு புதிய சட்டத்தில் விலக்கு அளிப்பதா என ஒன்றிய அரசுக்கு கேள்வி எழுப்பியதுடன், ஈசா அறக்கட்டளையின் கட்டடங்கள் எவ்வாறு விலக்கு அளிக்கும் பிரிவின் கீழ் கொண்டுவரப்பட்டன என விளக்கம் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை நாளைக்கு விசாரணையைத் தள்ளிவைத்துள்ளனர்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,384.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.