பிகாரில் முழுமையாக மதுவிலக்கை அமல்படுத்துவதற்காக அந்த மாநில அரசு வெளியிட்ட அறிவிக்கையை பாட்னா உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. பிகாரில் நிதீஷ் குமார் தலைமையிலான மதச்சார்பற்ற மாகூட்டணி அரசு, உள்நாட்டு வகை மதுபானங்களைத் தயாரிப்பது, விற்பது, அருந்துவது ஆகியவற்றுக்கு கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி முதல் தடை விதித்தது. அதை தொடர்ந்து, வெளிநாட்டு வகை மதுபானங்களுக்கும் தடை விதிக்கப்பட்டது. பின்னர், இது தொடர்பான சட்டத்தின் அமலாக்கத்தின்போது, மதுவிலக்கை மீறுவோருக்கு சிறைத் தண்டனையையும் அபராதத்தையும் அதிகரிப்பது, வீட்டில் மது இருந்தால் குடும்பத்தில் உள்ள வயதுவந்தோரைக் கைது செய்வது போன்ற அம்சங்களைச் சட்டத்திருத்தம் மூலம் மாநில அரசு சேர்த்தது. திருத்தப்பட்ட மதுவிலக்கு சட்டமானது பிகார் சட்டப்பேரவையின் மழைக்காலக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. ஆளுநர் ராம்நாத் கோவிந்தும் ஒப்புதல் அளித்து விட்டார். இந்தச் சட்டம் தொடர்பான அறிவிக்கை மகாத்மா காந்தி பிறந்த தினமான அக்டோபர் 2ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, பிகாரில் மதுவிலக்கை அமல்படுத்துவதற்காக மாநில அரசு கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி வெளியிட்ட அறிவிக்கையை எதிர்த்து மதுபான வர்த்தக சங்கத்தினரும், பல்வேறு தனிநபர்களும் பாட்னா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுக்கள் தலைமை நீதிபதி இக்பால் அகமது அன்சாரி தலைமையிலான அமர்வு முன்பு கடந்த மே மாதம் 20ஆம் தேதி விசாரணைக்கு வந்தன. அப்போது நீதிபதிகள் இவ்விவகாரத்தில் எந்த உத்தரவையும் பிறப்பிக்காமல் விசாரணையை ஒத்திவைத்தனர். இந்நிலையில், மேற்கண்ட மனுக்கள் மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது மதுவிலக்கு தொடர்பாக பிகார் அரசு வெளியிட்ட அறிவிக்கையை நீதிபதிகள் ரத்து செய்தனர். அது அரசியல்சாசனத்தை மீறி அமைந்துள்ளதால் அதை அமல்படுத்தக் கூடாது என்று நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர். இந்த உத்தரவு குறித்தும், திருத்தப்பட்ட மதுவிலக்கு சட்டம் தொடர்பான அறிவிக்கை திட்டமிட்டபடி அக்டோபர் 2ஆம் தேதி வெளியிடப்படுமா? என்றும் பிகார் அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞர் லலித் கிஷோரிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு, “நீதிமன்ற உத்தரவைப் பார்த்த பிறகே இது தொடர்பாக என்னால் கருத்து கூற முடியும்” என்று அவர் பதிலளித்தார். இதனிடையே, உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்வது தொடர்பாக முதல்வர் நிதீஷ் குமார் உயரதிகாரிகளுடன் வௌ;ளிக்கிழமை ஆலோசனை நடத்தினார். பிகாரில் முழுமையான மதுவிலக்கை அமல்படுத்துவதற்கான மாநில அரசின் அறிவிக்கையை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததைத் தொடர்ந்து, உயரதிகாரிகளுடன் நிதீஷ் குமார் அவசர ஆலோசனை நடத்தினார். அப்போது, திருத்தப்பட்ட மதுவிலக்கு சட்டத்துக்கான அறிவிக்கைக்கு ஒப்புதல் அளிப்பதற்காக, வரும் 2-ஆம் தேதி அமைச்சரவை கூட்டத்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. மேலும், பாட்னா உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வதற்கான வாய்ப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. பிகாரில் முழுமையான மதுவிலக்கை தொடர்ந்து செயல்படுத்துவதில் நிதீஷ் குமார் உறுதியாக இருப்பதாகவும், அதற்காக திருத்தப்பட்ட மது விலக்கு சட்டத்துக்கான அறிவிக்கைக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்படும் எனவும் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



