உத்தரப் பிரதேச மாநிலம், முசாஃபர்நகர் மாவட்டத்தில்
கடந்த ஆண்டு நடைபெற்ற கூட்டத்தில் பொது மக்களிடையே வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில்
பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவுக்கு எதிராக ஆதாரமில்லை
என்று அந்த மாநில போலீஸார் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பான
வழக்கு விசாரணை, முசாஃபர்நகரில் உள்ள நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, அந்த வழக்குத் தொடர்பான இறுதி விசாரணை அறிக்கையை உத்தரப் பிரதேச போலீஸார்
தாக்கல் செய்தனர். அதில்,
அமித் ஷாவுக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து,
அந்த விசாரணை அறிக்கை தலைமை நீதித்துறை நடுவர் முன்னிலையில் தாக்கல் செய்யப்படவுள்ளது.
விரைவில் அந்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, வழக்கு தொடர்பாக தலைமை நீதித்துறை நடுவர்
முடிவெடுத்து அறிவிப்பார். முசாஃபர்நகர்
மாவட்டம், பர்வார் கிராமத்தில் கடந்த ஆண்டு 4ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் அமித் ஷா
பேசியபோது, மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று நரேந்திர மோடி பிரதமரானால், உத்தரப்
பிரதேசத்தில் உள்ள முல்லா முலாயம் சிங்கின் அரசு கவிழும் என்றும், முஸ்லிம்களைச் சமாஜவாதி
கட்சி தனது வாக்கு வங்கியாக நினைப்பதால், மற்ற சமூகத்தினர் அக்கட்சிக்கு வாக்களிக்க
கூடாது என்று கேட்டுக் கொண்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக
அளிக்கப்பட்ட புகாரையடுத்து, அமித் ஷா மீது வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசியதாக
காக்ரோலி காவல்நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில்
வழக்கு தொடுக்கப்பட்டது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



