கோயம்புத்தூர்
விழா தெடங்கியுள்ள நிலையில், கோவை மக்களுக்கு நல்லதோர்
செய்தி கிடைத்தது. நடுவண் அரசின்
நிதியுதவியுடன், முதற்கட்டமாக செயல் படுத்தப்படவுள்ள, சீர்மிகுநகர் திட்டத்தில் பயன்
பெறவுள்ள, 20 நகரங்களில், கோவையும் இடம் பிடித்துள்ளது. இந்தத் திட்டம்
சிறப்பாக செயல்படுத்தப்பட்டால், பல நல்ல மாற்றங்கள் நிகழுமென்பது நிச்சயம். முதற்கட்டமாக,
தற்போது தேர்வாகியுள்ள, 20 நகரங்களுக்கு, 50 ஆயிரத்து 802 கோடி ரூபாய் நிதி, பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.
ஒவ்வொரு நகருக்குமான நிதி, அதன் திட்ட செயல்பாட்டுக்கேற்ப, ஐந்தாண்டுகளில் பிரித்து
வழங்கப்படும். இத்திட்டத்துக்கு, தேர்வு பெற்றிருப்பதால், கோவையில் என்னென்ன திட்டங்கள்
செயல்படுத்தப்படும் என்பது, இந்நகர மக்களின் மாபெரும் எதிர்பார்ப்பாகவுள்ளது. ஐ.சி.ஆர்.ஏ., என்ற
கன்சல்டிங் நிறுவனத்தின் உதவியுடன், கோவை மாநகராட்சி தயாரித்துள்ள உத்தேச திட்ட மதிப்பீட்டில்,
பகுதி நிலையிலான திட்டம் 10, பான் நகர திட்டம் 2 என 12 முக்கியமான திட்டங்கள், இதில்
இடம் பெற்றுள்ளன. சீர்மிகுநகர் திட்டத்தில்,
முதலிடம் பிடித்திருப்பது, குளங்கள் மேம்பாடு. கோவை நகரிலுள்ள அனைத்து குளங்களையும்
தூர் வாரி, ஆகாயத்தாமரைகளை அகற்றி, கரையைப் பலப்படுத்தி, கால்வாயை புதுப்பித்து, கழிவு
நீர் கலக்காமல் தடுப்பது மற்றும் இவை சார்ந்த பணிகளுக்காக
மட்டும், 189 கோடி ரூபாய்க்கு மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தக் குளங்களின்
தோற்றத்தையே, முற்றிலும் மாற்றும் வகையில், பூங்காக்கள், புல்வெளி, நடைபாதை, கண்காணிப்பு
கோபுரம், நீர் விளையாட்டு, மூலிகைத்தோட்டம், பார்வையாளர் மாடம், படகு இல்லம், சோலார்
எல்.இ.டி., விளக்குகள் மற்றும் பார்க்கிங் போன்றவற்றுக்கு, 66 கோடி ரூபாய்க்கு திட்டம்
வகுக்கப்பட்டுள்ளது. இந்த குளங்கள் அனைத்தும், சாலைகளால் இணைக்கப்படுவது முக்கிய அம்சம். கிளைச்சாலைகளில்,
நடைபாதை, சைக்கிள் டிராக், பைக் வழித்தடம், கால்வாய், மின் வடம் மற்றும் குழாய்களை
கொண்டு செல்வதற்கான தனிக்கட்டமைப்பு, பார்க்கிங், பயணிகள் நிழற்குடை, போக்குவரத்து
இல்லாத பாலங்கள், சிங்காநல்லூர் குளங்களை இணைக்கும் 80 அடி சாலை போன்றவற்றுக்கு
271 கோடி ரூபாய், மற்ற சாலைகளில், இதே போன்ற கட்டமைப்புகளை ஏற்படுத்த 352 கோடி ரூபாய்
என மதிப்பிடப்பட்டுள்ளது. அனைவருக்கும் வீடு
என்ற திட்டத்தின் கீழ் வீடுகள் மற்றும் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த 233 கோடி ரூபாய்
மழை நீர் சேமிப்புக்கு 11 கோடி ரூபாய், திடக்கழிவு மேலாண்மைப் பணிகளுக்கு 23 கோடி ரூபாய்,
நச்சுக்கழிவு மேலாண்மைப் பணிகளுக்கு 15 கோடி ரூபாய், கழிப்பிட வசதிகளுக்கு 4 கோடி ரூபாய்,
மின்சக்தி மற்றும் ஆற்றல் உற்பத்திக்கு 78 கோடி ரூபாய் உட்பட 1427 கோடி ரூபாய்க்கு
திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. இவற்றைத் தவிர்த்து,
நகரம் முழுவதும், சிசிடிவி கேமராக்கள் பொருத்த 84 கோடி ரூபாய், எல்.இ.டி., தெரு விளக்குகள்
அமைக்க 59 கோடி ரூபாய் என 143 கோடி ரூபாய் மதிப்புக்கு, பான் நகர திட்டமும் வகுக்கப்பட்டுள்ளது.
மொத்தமாக, 1,570 கோடி ரூபாய்க்கு மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, ஐந்தாண்டு வட்டிக்கும்
சேர்த்து, 1,998 கோடி ரூபாய் செலவாகுமென மதிப்பிடப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான
முந்தைய நடுவண் அரசின் ஜவஹர்லால் நேரு தேசிய நகர புனரமைப்புத் திட்டத்தில், 3,200 கோடி
ரூபாய் மதிப்பில், பாதாள சாக்கடைத் திட்டம், பில்லூர் 2வது குடிநீர்த் திட்டம், மழை
நீர் வடிகால், நகர்ப்புற மக்களுக்கான அடிப்படை வசதிகள் வழங்கும் திட்டம் என பல்வேறு
திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. எனவே, சீர்மிகுநகர் திட்டத்தில், கோவைக்கு 3,000 கோடி
ரூபாய் ஒதுக்கப்படும் வாய்ப்புள்ளது. மேற்கூறிய திட்டங்களுடன்,
சுகாதாரம், மக்கள் பாதுகாப்பு, போக்குவரத்து மேம்பாடு, தகவல் தொழில் நுட்பம் உள்ளிட்ட
பிற திட்டங்களையும் செயல்படுத்துவதே, மாநகராட்சியின் நோக்கம். அரசியல் தலையீடின்றி,
எந்த தொகுதிக்கும் பாரபட்சமின்றி, தொலைநோக்கோடு இந்தத் திட்டங்களை வகுத்துள்ள மாநகராட்சி
அதிகாரிகள், நிச்சயம் பாராட்டுக்குரியவர்கள். அதே நோக்கில், இத்திட்டங்களைச் சிறப்பாக
செயல் படுத்தினால், மிக்க நன்று. கோவை மாநகராட்சி
கமிஷனர் விஜய கார்த்திகேயன் கூறுகையில், நடுவண் அரசின் அறிவிப்பு, மிகவும் மகிழ்ச்சி
அளிக்கிறது. இத்திட்டத்துக்கு, தேர்வு செய்யப்பட்ட 97 நகரங்களில், முதற்கட்ட பட்டியலில்
இடம் பெறுவதற்கு, கடுமையான போட்டி இருந்தது. ஆனாலும், நமது நகரம் தேர்வு செய்யப்பட்டிருப்பது,
நம்மால் முன் வைக்கப்பட்ட திட்டங்கள், சரியாக இருந்திருக்கிறது என்ற திருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வரும்போது, கோவை நகரம், புதுப்பொலிவை, புதிய தோற்றத்தைப்
பெறும் என்பது உறுதி, என்றார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



