Show all

இனிமேல் எண்ணெய் அல்ல; தரவுகள்தாம் உலகைத் தீர்மானிக்கும்! முகேஷ் அம்பானி

இந்திய தகவல்தொழில்நுட்ப நிறுவனங்களின் கூட்டமைப்பான நாஸ்காம் நடத்திய கருத்தரங்கில் நேற்று பேசிய ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, ‘ட்ரம்பின் நடவடிக்கைகள் ஒருவிதத்தில் இந்தியாவுக்கு சாதகமானதாகக் கூட அமையலாம்’ எனத் தெரிவித்துள்ளார். மேலும் அவர் இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களின் வளர்ச்சி மற்றும் எதிர்காலம் குறித்தும் தனது கருத்துகளைத் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் ட்ரம்பின் நடவடிக்கைகளால் உலகின் பல முன்னணி நிறுவனங்கள் அதிருப்தியில் உள்ளன. இந்நிலையில், ட்ரம்பின் நடவடிக்கைகள் எப்படி இந்தியாவுக்கு சாதகமானதாக மாறக்கூடும் என முகேஷ் அம்பானி பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.

     அமெரிக்காவின் 45-வது அதிபர் ஆகியிருக்கும் டொனால்ட் ட்ரம்ப், அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போதே, அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை என முழங்கி வந்தார். வெளிநாட்டைச் சேர்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்படுவதால் அமெரிக்கர்கள் பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டிவந்தார். வெளிநாட்டிலிருந்து அமெரிக்காவுக்கு பணி புரிய நுழையும் ஹெச்1-பி நுழைவு அனுமதிக்குப் பல விதமான கட்டுப்பாடுகள் விதிக்கும் மசோதாவை தாக்கல் செய்தது, சிரியா உள்ளிட்ட ஏழு நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்கும் முடிவில் விடாப்பிடியாக இருப்பது என ட்ரம்ப் மேற்கொண்ட பல நடவடிக்கைகள் டெக் நிறுவனங்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

     அமெரிக்க அதிபர் தேர்தலின் போது ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஹிலரி கிளின்டனை ஆப்பிள் நிறுவனத்தின் நிருவாகத் தலைவர் டிம் குக் வெளிப்படையாகவே ஆதரித்தார். ட்ரம்ப் அதிபர் ஆனதும் டிம் குக் தனது அணியினருக்கு எழுதிய மடலில் அவரது அச்சத்தை வெளிப்படுத்தியிருந்தார். முகநூல் நிருவாகத் தலைவர் மார்க் சக்கர்பெர்க் வெளிப்படையாகவே தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார். மேலும் ட்ரம்ப் மேற்கொண்ட நடவடிக்கைகளால் தங்களது வர்த்தகம் பாதிக்கப்படும் என முகநூல், கீச்சகம், மைக்ரோசாப்ட்  உள்பட 97 தொழில்நுட்ப நிறுவனங்கள் இணைந்து சட்ட ஆவணம் ஒன்றையும் தாக்கல் செய்துள்ளன.

     அமெரிக்காவின் ஹெச்1-பி நுழைவு அனுமதி கெடுபிடியால் இந்தியத் தொழில்நுட்ப நிறுவனங்கள் பெரும் வீழ்ச்சியை சந்திக்கும் எனக் கருதப்படுகிறது.

     இந்நிலையில், இந்திய தகவல்தொழில்நுட்ப நிறுவனங்களின் கூட்டமைப்பான நாஸ்காம் நடத்திய கருத்தரங்கில் நேற்று பேசிய ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, ‘ட்ரம்பின் நடவடிக்கைகள் ஒருவிதத்தில் இந்தியாவுக்கு சாதகமானதாகக் கூட அமையலாம். இதனால் இந்தியர்களின் திறமையும், தகவல்தொழில்நுட்பத் துறையும் இந்தியாவில் உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதில் கவனம் செலுத்தும். மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், தொழிற்சாலைகளின் உற்பத்தியைப் பெருக்கும் வாய்ப்பாகவும் இது அமையும். உள்ளூர் சந்தை மிகப்பெரியது. அதில் நாம் கவனத்தை செலுத்த வேண்டும். உலகின் மிகப்பெரிய மென்பொருள் சந்தை கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியாவை மாற்றக்கூடிய உள்கட்டமைப்பு வசதிகள் நம்மிடம் இருக்கிறது’

எனத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா போன்ற நாடுகளை மட்டும் சார்ந்திருக்காமல் உள்ளூர் சந்தையில் வளர்ச்சி ஏற்படுவதற்கான வாய்ப்பாக இதை மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியத்தை முகேஷ் அம்பானி வலியுறுத்தியுள்ளார்.        

     மேலும் அவர், தரவுகள் தாம் இனி மிகப்பெரிய வளமாக இருக்கப் போகிறது. அந்தவகையில், 130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா இயற்கையிலேயே அருள்வாழ்த்து பெற்ற நாடு. நாம் ஒரு சகாப்தத்தின் தொடக்கத்தில் இருக்கிறோம். இந்த சகாப்தத்தில் பல விசயங்களைத் தீர்மானிக்கும் வல்லமை கொண்டதாக தரவகள் இருக்கும். எண்ணெய் வளத்தைப் போல இனி தரவுகள்தாம் உலகைத் தீர்மானிக்கக் கூடிய புதிய வளமாக இருக்கும் என்பதால், திறமையான இளம் மக்கள்தொகை கொண்ட இந்தியாவுக்கு இது கூடுதல் பலமாக இருக்கும் என்பதைத் திடமாக நம்புகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

     ட்ரம்ப் பதவியேற்றபின் வெளிநாட்டினரை அதிகம் நம்பியிருக்கும் சிலிக்கான் வேலி கலக்கத்தில் உள்ளது. இந்த இக்கட்டான தருணத்தில் இந்தியாவின் முதல்;;நிலை தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் இந்த பேச்சு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

     நல்ல செய்திதான்! மோடியும் காங்கிரசும் திரும்ப திரும்ப ஆளும் வரை உள்ளூர் சந்தையில் வளர்ச்சி ஏற்படுவதற்கான

வாய்ப்பே இல்லையே. வருமான வரி உச்ச வரம்பு மாதம் வெறுமனே இருபதாயிரம் என்கிற நிலையில் எப்படி உள்ளூர் சந்தை வளரமுடியும்?

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.