காவிரியிலிருந்து தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட தர முடியாது என கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி. பாட்டீல் கூறியுள்ளார். காவிரி நீர் பங்கீடு தொடர்பாக காவிரி கண்காணிப்பு குழுக் கூட்டம் இன்று நடந்தது. இதில் நாளை மறுநாள் (செப்டம்பர் 21) முதல் 10 நாட்களுக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் தமிழகத்திற்கு திறக்க வேண்டும் என காவிரி கண்காணிப்பு குழு கர்நாடக அரசிற்கு உத்தரவிட்டது. ஏற்கனவே உச்ச நீதிமன்றம் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட தீர்ப்பு வழங்கி உள்ளது. காவிரி கண்காணிப்பு குழுவும் தமிழகத்திற்கு நீர் திறக்க உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்த கர்நாடக நீர்வளத் துறை அமைச்சர் எம்.பி. பாட்டீல், “தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட தர முடியாது” என தீர்ப்புகளை மதிக்காமல் ஆணவமாகக் கூறினார். இது தொடர்பாக, கர்நாடக மாநில பாரதிய ஜனதா கட்சி தலைவர் எடியூரப்பா வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரி கண்காணிப்பு குழுவின் உத்தரவைக் கர்நாடக அரசு அமல்படுத்த கூடாது. தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடக் கூடாது. நம்மிடம் போதிய தண்ணீர் இருப்பு இல்லை. தண்ணீர் திறக்காமல் இருப்பதன் மூலம் கண்காணிப்பு குழுவின் உத்தரவை மீறியதாக யாரும் கூறமுடியாது. இந்த விவகாரத்தில் மாநில அரசிற்கு கர்நாடக பா.ஜ., உறுதுணையாக இருக்கும்” என தெரிவித்துள்ளார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



